போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் சிக்னல் பயன்பாடுகள் குறித்து மாணவர்களிடம் விளக்கும் வகையில் 'போக்குவரத்து விழிப்புணர்வு பூங்கா' அமைக்க திட்டமிடப்பட்டது.
பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்துகின்றனர். காலையில் எழுந்து தனியார் டியூஷன்கள், பள்ளி வகுப்புகள், மாலையில் டியூஷன் என ரவுண்ட் அடித்து இரவு, 9:00 மணிக்கு வீடு திரும்புகின்றனர். நாள் முழுவதும் படிப்புக்காக செலவிடும் மாணவர்களுக்கு, பெற்றோர்கள் மொபைல்போன், பைக் என வாங்கிக்கொடுத்து ஊக்குவிக்குகின்றனர். 18 வயது நிரம்பாதவர்கள் ரோட்டில் வாகனம் ஓட்ட அனுமதிப்பதன் மூலம் போக்குவரத்து விதிமுறைகள் மீறப்படுகிறது. எதிர்கால கனவுகளுடன் இளம்தளிர்கள் கண்மூடித்தனமான வேகத்தில் வாகனத்தை ஓட்டுவதால் அதிகளவில் விபத்துகள் ஏற்படுகின்றன.
ெஹல்மெட் அணியாமல் வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. போக்குவரத்து விதிமுறைகளை கண்டுகொள்ளாத வகையில், பள்ளி மாணவர்கள் வாகனங்களை தாறுமாறாக இயக்கி வருகின்றனர். பெற்றோர் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு போலீசார் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குழந்தைகளிடம் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'போக்குவரத்து விதிகள் விழிப்புணர்வு பூங்கா' என்ற பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நகராட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த அவசர கூட்டத்தில்,' பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட கந்தசாமி பூங்காவில் நான்கு ஏக்கர் 14 சென்ட் பரப்பளவில் அமைந்துள்ளது. மேற்படி பூங்காவில், புதிதாக விளையாட்டு உபகரணங்கள், நீரூற்றுகள், கான்கிரீட் நடைபாதைகள், புல்தரைகள், பூங்குன்றுகள் மற்றும் வண்ண விளக்குகள் அமைத்து நகராட்சியால் பராமரிக்கப்படுகிறது.
இப்பூங்காவில் கிழக்கு பகுதியில் 50 சென்ட் பரப்பளவுள்ள பகுதியில் குழந்தைகள் போக்குவரத்து விதிகள் பற்றியும், போக்குவரத்து சிக்னல் பற்றியும் முறையாக அறிந்து கொள்ளும் வகையில் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பூங்கா அமைக்கலாம். இந்த பூங்கா அமைப்பதால் போக்குவரத்து விதிகள் மற்றும் சிக்னல் பயன்பாடு பற்றியும் குழந்தைகள் தெளிவாக அறிந்து கொள்ள இயலும். இதற்கான செலவுத்தொகையினை மாவட்ட சாலை பாதுகாப்பு நிதியிலிருந்து பெறலாம். கோவை மாவட்ட சாலை பாதுகாப்பு நிதியிலிருந்து மானியமாக பெற்று அமைக்க உரிய நிதி ஒதுக்கீடு செய்ய மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைக்கலாம்,' என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த பூங்கா அமைப்பதன் மூலம் பூங்காவிற்கு வரும் குழந்தைகளிடம் போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு ஏற்றதாக அமையும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பூங்கா அமைப்பதின் நோக்கம்
'போக்குவரத்து விழிப்புணர்வு பூங்கா' அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பூங்கா அமைப்பதன் நோக்கம் போக்குவரத்து விதிமுறைகளை மாணவர்கள் கற்று அதன்படி வாகனங்களை இயக்க வேண்டும் என்பதாகும். எனவே, இப்பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கைஎடுக்கப்படும்,' என நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்
No comments:
Post a Comment