பதிவு நெடியதாயினும் அனைவரும் முழுமையாகப் படித்துப் பகிர்வீரெனும் அவாவில் பதிவிடுகிறேன்....
தேர்வு முடிவுகளில் அனைவரும் கேட்கும் முக்கியக் கேள்வி தனியார் பள்ளியுடன் ஒப்பிடுகையில் அரசுப்பள்ளிகளின் தேர்ச்சி % குறைந்தே இருக்கிறதே ஏன்?
தனியார் பள்ளிகளில் மழலையர் வகுப்புச் சேர்க்கையின் போதே பெற்றோர்களின் வருமானம், குடும்பச்சூழல், கல்வியறிவு & மாணவரின் முன்னறிவையும் (Pre.K.G syllabus தான்) சோதித்துப் பார்த்துவிட்டே (Screening Test) சேர்க்கின்றனர்.
தனியார் பள்ளியில், 5வயது பூர்த்தியான மாணவனுக்கு முன்னறிவு இல்லையெனக்கூறி மழலையர் வகுப்பில் சேர்ப்பித்த நிகழ்வும் நடந்துள்ளது.
அரசுப்பள்ளியிலோ, கல்வியறிவே இல்லையெனினும் வயதிற்கேற்ற வகுப்பில் தான் (பள்ளியே நுழையா 9 வயது நிரம்பியவரை 5-ம் வகுப்பில் தான்) சேர்த்தாக வேண்டும். முன் கல்வியையும் உடன் போதிக்கவும் வேண்டும்.
5 வயது பூர்த்தியான மாற்றுத்திறனாளிகளில் கை-காலில் சிறு குறைபாடுடையோரைத் தவிர ஏனையோர் அனைவரும் 100% அரசுப் பள்ளிகளில் மட்டும் தான் பயில்கின்றனர்.
தனியார் பள்ளியில் 400க்கு மேல் மதிப்பெண் பெறாத எந்த மாணவரையும் 11-ம் வகுப்பில் சேர்த்துக் கொள்வதில்லை. ஒவ்வொரு படிப்பிற்கும் குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணயம் செய்தே அனுமதிக்கின்றனர்.
இதனடிப்படையில், மதிப்பெண், சமூகம் & பொருளாதாரத்தால் ஒதுக்கப்பட்டவர்கள் தான் அரசுப்பள்ளியை நாடி வருகின்றனர் என்பதே உண்மை.
தனியார் பள்ளியில் மாணவனின் நிலையை எடுத்துரைக்க, குறிப்பேட்டில் எழுதியனுப்பினாலே எந்த ஊரில் இருந்தாலும் குறித்த நேரத்திற்குள் பெற்றோர் குவிந்துவிடுவர். அரசுப் பள்ளியிலோ உள்ளூரில் இருப்போரே நேரில் சென்றழைத்தாலும் 80% வருவதில்லை. ஏனெனில், அவர்களின் தொழில் நிலை அப்படி. இதனால் ஒழுக்கத்திற்காக ஆசிரியர் அதட்டிப்பேசினாலே ஆட்சியரிடம் புகார் தெரிவித்துவிடுவேன் (இன்றைய சட்டம் அது) எனும் மாணவர்களுக்கும் பெற்றோரின் இச்செயல் சாதகமாகிவிடுகிறது.
ஒவ்வொரு பாடத்திற்கும் வினாத்தாள் வரைவு (Blue Print) வெளியிடப்பட்டு 10 பாடங்களில் (3-ஐ Choice-ல் விட்டுவிட்டு) 7 பாடங்களை மட்டும் படித்தாலே 100% மதிப்பெண் பெற்றுவிடலாம் என்றால் கல்வித்துறை 7 பாடங்களை மட்டுமே கொடுத்திருக்க வேண்டியது தானே. இதனால் சில பாடங்களை நடத்தாமலே விட்ட தனியார் பள்ளிகள் இன்றும் உள்ளன. நான் பயின்றதும் அப்படித்தான். ஆனால் அரசுப்பள்ளிகளில் அப்படியில்லை. அனைத்துப் பாடங்களையும் நடத்தி பதிவேடுகள் உரிய காலத்தில் சமர்ப்பித்தாக வேண்டும்.
இவ்வாறு முழுமையான பாடங்களை, 9 மாதங்களுக்குள் படித்துத் தேர்வெழுதும் மாணவர்களை, குறிப்பிட்ட சில பாடங்களை மட்டும் 18 மாதங்களாக (+1 காலாண்டிலேயே +2 பாடம்) மனனம் செய்து தேர்வெழுதும் மாணவரோடு ஒப்பிடுவது எவ்வகையில் நியாயமோ!?
தேர்வறையில் ஒருமதிப்பெண் வினாவிற்கு விடையை அளிப்பது, வினாத்தாளை வாட்சப்பில் அனுப்புவது, தன் மாணவருக்கு தானே அறைக் கண்காணிப்பாளராவது என தனியார் பள்ளி நிர்வாகிகள் செய்யும் தில்லுமுள்ளுகள் அதிகம். கிருஷ்ணகிரி நிகழ்வும் மூடி மறைக்கப்படத் துணிந்த ஒன்றுதான். எப்படியோ வெளியாகிவிட்டது. இது அங்கு மட்டும் நிகழ்ந்ததாக முடிவுக்கு வந்துவிடாதீர்கள். அங்கு மட்டும் வெளிவந்தது அவ்வளவே.
கடந்த பொதுத்தேர்வு முடிவுகளில் மாநிலத் தரநிலை பெற்ற தனியார் பள்ளி மாணவர்களில் 99% பேரால் தொழிற்கல்வி நுழைவுத் தேர்வில் முதல் பத்து இடங்களுக்குள்ளாகக் கூட வர இயலவில்லை.
பொதுத்தேர்விற்காக இரு ஆண்டுகளாக கணக்குகளையும் மனனம் செய்து மாநிலத் தரநிலை பெற்றவர்கள் நுழைவுத் தேர்வில் வினவப்படும் சிந்தித்து பதிலளிக்கும் வினாக்களுக்கு எப்படி பதிலளிக்க இயலும். அன்று அறிவைத் தீர்மானித்த நுழைவுத் தேர்வுகளே ஒருசில காரணங்களால் இன்று இல்லை.
இவ்வாண்டு மற்ற பாடங்களில் 1000க்கணக்கானோர் சதமடித்த நிலையில் இயற்பியலில் அதிகளவில் சாதிக்க இயலாததற்கு முக்கியக் காரணம், சிறிது சிந்தித்து விடையளிக்கும் படியாக வினா வடிவமைப்பு இருந்தது தான்.
ஓடும் குதிரையில் பணம் கட்டுபவன் புத்திசாலி. மதிப்பெண் பந்தயத்தில் ஓடும் குதிரைகளை மட்டுமே தன்னகத்தே வைத்துக்கொள்ளும் தனியார் பள்ளி நிர்வாகிகளை என்னவென்பது?
சொந்த அலுவல்கள், அலுவலக அலுவல்கள் என எல்லாவற்றையும் நிறைவேற்றிவிட்டு, கோவேரிக் கழுதைகளெனத் தனியார் பள்ளிகளால் ஒதுக்கப்பட்டவர்களைக் குறிப்பிட்ட காலத்திற்குள் தங்களால் இயன்ற எல்லை வரை நிறைவாகத் தயார் செய்யும் அரசுப் பள்ளிகளை இவர்களுடன் ஒப்பிடும் இழிச்செயலை இனியேனும் செய்யாதிருங்கள்.
மாணவர்களைக் குதிரைகளோடு ஒப்பிட்டதற்கு மன்னிக்கவும். மதிப்பெண் பந்தயத்தை விளக்கிட வேறு சொல்லாடல்கள் ஏதும் சுறுக்கெனத் தைக்குமா என எனக்குத் தோன்றவில்லை.
மதிப்பெண் பந்தயத்தைப் பற்றி அடுத்த பதிவில் பகிர்கிறேன்.
✒இவண்,
அரசுப் பள்ளி ஆசிரியன்
எனும் தலை நிமிர்வோடு,
No comments:
Post a Comment