சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் இன்னும் 10 நாள்களில் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மருத்துவப் படிப்புகளைப் பொருத்தவரை எம்.பி.பி.எஸ்.,பி.டி.எஸ்., கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு அடுத்தபடியாக சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை மருத்துவப் படிப்புகளைப் படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பிற விண்ணப்பங்கள்: பிளஸ் டூ தேர்வு முடிவுகள் மே மாதம் 7-ஆம் தேதி வெளியானது. அதனைத் தொடர்ந்து மே 11-ஆம் தேதி எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. அதன் பிறகு கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தாமதம்: அதேவேளையில், சித்த மருத்துவம்,ஆயுர்வேதம்,யுனானி, ஹோமியோபதி, யோகா-இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம் ஆண்டுதோறும் தாமதமாகத் தொடங்குகிறது. கடந்த கல்வியாண்டில் ஜூலை 14-ஆம் தேதி விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. கலந்தாய்வு அக்டோபர் 17-ஆம் தேதி நடைபெற்றது. மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு உள்ளிட்ட நடைமுறைகள் மிகவும் காலதாமதமாக நடந்தன.
இதனால் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள், இந்திய முறை மருத்துவப் படிப்புகளில் ஆர்வமுள்ள மாணவர்கள் பலர் வேறு படிப்புகளுக்குச் சென்றுவிட்டனர்.
மத்திய குழுவினர் ஆய்வு: நாடு முழுவதும் உள்ள சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள கட்டமைப்பு வசதிகள், ஊழியர்களின் எண்ணிக்கை குறித்து ஆண்டுதோறும் இந்திய மருத்துவத்துக்கான மத்திய கவுன்சில் (சி.சி.ஐ.எம்.) ஆய்வு நடத்தும். அவர்கள் தாக்கல் செய்த அறிக்கையை, சி.சி.ஐ.எம்-ன் செயற்குழு ஆய்வு செய்து, இறுதி அறிக்கையை மத்திய அரசின் ஆயுஷ் துறையிடம் சமர்ப்பிக்கும்.
இந்த ஆண்டு கடந்த மார்ச்,ஏப்ரல் மாதங்களில் மத்திய கவுன்சில் ஆய்வு நிறைவு பெற்றுவிட்டது.
இது குறித்து தேர்வுக் குழு அதிகாரிகள் கூறியது:
மத்திய ஆயுஷ் துறையின் நடைமுறைகள் அனைத்தும் நிறைவு பெற்றுவிட்டது. இப்போது விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் விவரக்குறிப்பு தமிழக அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு ஒப்புதல் அளித்ததும், விண்ணப்பங்கள் அச்சிடப்படும். அதன்பிறகு செய்தித்தாள்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, விண்ணப்ப விநியோகம் நடைபெறும். இந்த ஆண்டு முன்னதாகவே விண்ணப்ப விநியோகம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் 10 நாள்களில் இதற்கான அறிவிப்பு வெளியாகும்.
கடந்த ஆண்டு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வை விரைவாக நடத்த வேண்டும் என தமிழக சுகாதாரத் துறைக்கு சித்த மருத்துவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
No comments:
Post a Comment