கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் மத்தூர் ஒன்றியம் எஸ்.மோட்டூர் அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளி உள்ளது. அனைத்து வசதிகளுடன் இயங்கி வந்த இப்பள்ளியில் கடந்த ஆண்டு முழுமையான மாணவர் சேர்ககை இல்லாமல் போனதால் தற்காலிகமாக மூடப்பட்டது.
இந்நிலையில், நிகழாண்டில் பள்ளி மாணவர்களை சேர்க்க, பொதுமக்கள், ஆசிரியர்கள் ஒன்றிணைந்து தீவிர முயற்சி மேற்கொண்டனர். அதற்கு பலனாக, நடப்பு கல்வியாண்டில் 1-ம் வகுப்பு முதல் 4-ம் வகுப்பு வரை சுமார் 20 மாணவர்களுடன் வழக்கம்போல நேற்று பள்ளி தொடங்கப்பட்டது.
நேற்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்களை மேளதாளத்துடன் ஊர்வலமாக அழைத்து வந்த ஆசிரியர்கள், பள்ளியில் கொடியேற்றி இனிப்பு வழங்கினர். விழாவில் மத்தூர் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் மாதேஸ் பேசும்போது, ‘‘இந்த ஆண்டே இப்பள்ளியில் முதலாம் வகுப்பில் சுமார் 10 மாண வர்கள் சேர்க்கப்பட்டதால், ஆங்கிலக் கல்வி தொடங்க வழிவகை மேற்கொள்ளப்படும்.
மேலும் போக்குவரத்து வசதி இல்லாத கிராமப்புறப் பள்ளி மாணவர்களை அழைத்து வருவதற்கும், கொண்டு விடு வதற்கும் 4 மாணவர்களுக்கு ஒருவர் என பாதுகாவலர் (எஸ்கார்ட்) நியமிக்கப்படுவர்’’ என்றார்.
இவ்விழாவுக்கு சாமல்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் தேவன் தலைமை தாங்கினார். மத்தூர் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் மாதேஷ், உதவி தொடக்கக்கல்வி சுப்பிரமணி, தொடக்கப்பள்ளி மேற்பார்வையாளர் சங்கர் தலைமை ஆசிரியர் தெய்வராணி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment