600-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் நிகழாண்டும் ஆங்கில வழிக் கல்வி இல்லை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, June 7, 2015

600-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் நிகழாண்டும் ஆங்கில வழிக் கல்வி இல்லை

திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கி வரும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் 600-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் நிகழாண்டும் ஆங்கில வழிக் கல்விக்கான மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அரசுப் பள்ளிகளில் அதிக அளவில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டும், மெட்ரிக். பள்ளிகளில் பெறப்படும் கூடுதல் கட்டணத்தில் இருந்து ஏழைப் பெற்றோர்களை பாதுகாக்கும் வகையிலும் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை 2012-13-ஆம் கல்வி ஆண்டில் தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.

இந்த அறிவிப்பு பெற்றோர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. ஏனெனில், அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு 4 சீருடைகள், சைக்கிள், புத்தகங்கள், புத்தகப் பை, விலையில்லா எழுது பொருள்கள், மேல்நிலை மாணவர்களுக்கு மடிக்கணினி, இலவச பேருந்து பயண அட்டை உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதனால், ஆங்கில வழிக் கல்வி அறிவிப்பு பெற்றோர்களின் பார்வையை அரசுப் பள்ளிகளின் பக்கம் திருப்பி, தற்போது மாணவர் சேர்க்கையும் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்க, மேல்நிலைப் பள்ளிகளில் 600-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் நிகழாண்டும் ஆங்கில வழிக் கல்விக்கான மாணவர்கள் சேர்க்கப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சந்திரசேகரிடம் கேட்டபோது, கட்டமைப்பு வசதி, ஆசிரியர்கள் பற்றாக்குறை, மாணவர் சேர்க்கை ஆகியவற்றை வைத்தே பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி தொடங்குவது குறித்து பள்ளி நிர்வாகத்தினர் முடிவு செய்வார்கள் என்றார்.

No comments:

Post a Comment