மருந்து பெயரை பெரிய எழுத்தில்தான் டாக்டர்கள் எழுத வேண்டும்: மத்திய அரசின் புதிய விதிமுறை விரைவில் அமல்
டாக்டர்கள், மருந்து சீட்டுகளில் எழுதும் மருந்துகளின் பெயர்களை எளிதில் படிக்க முடியாது என்று பரவலான கருத்து உள்ளது. மருந்து கடைக்காரர்கள், அதை படித்து புரிந்து கொண்டு, சரியான மருந்துகளை எடுத்துக் கொடுத்தால் பிரச்சினை இல்லை.
அவர்களும் புரியாமல், தவறான மருந்துகளை எடுத்துக் கொடுத்து விட்டால், சில நேரங்களில் அது உயிரிழப்புக்கும் காரணமாகி விடும்.
இதுகுறித்து, கடந்த ஆண்டு பாராளுமன்றத்தில் ஒரு விவாதத்தின்போது, எம்.பி.க்கள் கவலை தெரிவித்தனர். அதை ஏற்றுக்கொண்ட மத்திய சுகாதார மந்திரி ஜே.பி.நட்டா, டாக்டர்கள் மருந்து பெயர்களை பெரிய எழுத்தில் எழுதும்வகையில், விதிமுறைகளை திருத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதாக கூறினார்.
அதன்படி, இந்திய மருத்துவ கவுன்சில் ஒழுங்குமுறை விதிகள்-2002-ன் கீழ், மத்திய சுகாதார அமைச்சகம், ஓர் அறிவிக்கையை அரசிதழில் வெளியிட உள்ளது. அதில், டாக்டர்கள், இனிமேல் மருந்து சீட்டுகளில் மருந்துகளின் பெயர்களை பெரிய (கேபிடல்) எழுத்துகளில் எழுதுவதுடன், மருந்துகளின் மருத்துவ வகை பெயர்களையும் குறிப்பிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ஒரு வாரத்துக்குள் இந்த அறிவிக்கை அரசிதழில் வெளியிடப்படும். டாக்டர்கள், பெரிய எழுத்துகளில், எல்லோரும் படிக்கும்வகையில் எழுத தொடங்கி விட்டால், அது நோயாளிகளுக்கும், மருந்து கடைக்காரர்களுக்கும் பலன் அளிக்கும். அதன்மூலம், மருந்துகளை தவறாக புரிந்து கொள்ளும் நிலைமை இனி ஏற்படாது.
இருப்பினும், டாக்டர்கள் பெரிய எழுத்துகளில் எழுதாவிட்டால், அவர்களுக்கு தண்டனையோ, அபராதமோ விதிக்கப்பட மாட்டாது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment