அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூல் செய்யும் கல்வி நிறுவனங்களை தடை செய்ய வேண்டும்’ என்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்திய மாணவர் சங்கம் சார்பில் கோவையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இச் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ராஜ்மோகன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தனியார் கல்வி நிறுவனங்களில் பின்பற்றப்பட வேண்டிய 25 சதவீத இட ஒதுக்கீட்டை பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் அமலாக்குவ தில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை கேட்டுப் பெற்றபோது, கடந்த ஆண்டு இந்த சட்டத்தின்படி தமிழகம் முழுவதும் 2,559 மாணவர்கள் மட்டுமே பயன்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 100 சதவீதம் அமலாகி உள்ளதாக பொய்யான தகவலை அமைச்சர் கூறி வருகிறார். இடஒதுக்கீட்டில் படித்த மாணவர்களின் தேர்வு முடிவுகளை அறிவிக்காத நிலை உள்ளது. தனியார் கல்வி நிறுவனங்கள் மீது எந்த நடவடிக் கையும் மேற்கொள்ளாமல் அரசு வேடிக்கை பார்க்கிறது.
மத்தியில், மோடி தலைமை யிலான பாஜக அரசு, திட்டமிட்டு தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 25 சதவீத இடஒதுக்கீட்டு சட்டத்தை காலாவதி யாக்க முயற்சிக்கிறது. கல்வித் துறைக்கு ஒதுக்க வேண்டிய நிதியில் ரூ.30 ஆயிரம் கோடி மானியத்தை வெட்டியுள்ளது. இதனால் தலித் மற்றும் பழங்குடி மாணவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில், தமிழகத்தில் மட்டும் 6 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்படுவர். இதற்கு எதிராக மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம் எழுதாததை, மாணவர் சங்கம் கண்டிக்கிறது.
அரசு நிர்ணயித்த கட்டணத்தைக் காட்டிலும் கூடுதலாக வசூல் செய்யும் கல்வி நிறுவனங்களையும், அரசின் சட்டத்தை மதிக்காத கல்வி நிறுவனங்களையும் தடை செய்ய வேண்டும். அந்த கல்வி நிறுவனங்களை அரசு ஏற்று நடத்த வேண்டும். மாணவர்கள் செலுத்தும் கல்வி கட்டணத்துக்கான ரசீது தருவதில்லை. இதனால், வங்கி மூலம் பணத்தை கட்டும் திட்டத்தை அமலாக்க வேண்டும்.
சென்னை ஐஐடி விவகாரத்தின் ஒரு பகுதியாக, அனைத்துக் கல்வி நிலையங்களிலும் அம்பேத்கர், பெரியார், சிங்காரவேலர், பகத்சிங், ஜீவா பெயரில் வாசிப்பு வட்டங்களை உருவாக்கி வருகிறோம். தமிழகத்தின் அனைத்து மாணவர் இயக்கங்களையும் ஒருங்கிணைத்து கருத்தரங்குகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment