ஈரோடு : கட்டுமான பணி காரணமாக, இடவசதி பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதால், அந்தியூர் அரசு பள்ளியில் இரு ஷிப்ட்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அந்தியூர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளி ஒரே பகுதியில் செயல்படுகிறது. பெண்கள் மேல்நிலை பள்ளியில், 6 முதல் ப்ளஸ் 2 வரை, 800க்கும் மேற்பட்ட மாணவியர் கல்வி பயில்கின்றனர்.போதிய வகுப்பறை இல்லாததால், கடந்த சில ஆண்டுகளாக மரத்தடியில் கல்வி பயின்று வந்தனர். மழை, வெயில் காலங்களில், இதனால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டது. வகுப்பறை கட்டிடம் கட்டி கொடுக்க வேண்டும் என்று கோரி வந்தனர்.கடந்தாண்டு, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி மூலம், கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போது விளையாட்டு மைதானம் பாதிக்கப்படும் எனக்கூறி, கட்டுமான பணிக்கு நிறுத்தப்பட்டு, மீண்டும் நடந்து வருகிறது.
பெண்கள் மேல்நிலை பள்ளியில் தவுட்டுப்பாளையம், அந்தியூர், புதுப்பாளையம், சந்தியபாளையம், புதுக்காடு பகுதியை சேர்ந்த, 800க்கும் அதிகமான மாணவியர் பயில்கின்றனர். கட்டுமான பணிகள் துவங்கிய போது, முழு ஆண்டு தேர்வு, கோடை விடுமுறை என விடுமுறை வந்ததால், பிரச்னையின்றி கட்டுமான பணிகள் நடந்தது. கட்டுமான பணி முழுமை பெற, டிசம்பர் மாதம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஆசிரியர்கள் வகுப்பு நடத்துவது குறித்து குழப்பம் அடைந்துள்ளனர்.போதிய இடவசதி இல்லாததால் தற்காலிக ஷெட் அமைக்க வழியில்லை. மேலும் மரங்கள் இல்லாததால், வகுப்பறைகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விளையாட்டு மைதானத்தில் சிமெண்ட் ஷீட்களை போட்டால், செலவு அதிகரிக்கும். சமுதாய கூடங்கள், காலியாக உள்ள அரசு கட்டிடங்கள் அருகில் இல்லை.ஏற்கனவே போதிய வகுப்பறைகள் இல்லாத சூழலில், தற்போது கட்டுமான பணிகளும் நடைபெற்று வருவதால், இட நெருக்கடி பிரச்னை அதிகரித்துள்ளது. இந்நிலையில், இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. மாணவியர் ஒரு சேர வரும்போது, இடவசதியற்ற நிலை ஏற்படும். திடீரென மழை வந்தால், ஒதுங்க கூட இடம் இல்லாத நிலை உள்ளது.
இதுபற்றி, சி.இ.ஓ., அய்யண்ணன், நேற்று கலெக்டர் பிரபாகரிடம் கூறும் போது, "ஆறு முதல் எஸ்.எஸ்.எல்.ஸி., வரை ஒரு ஷிப்ட் ஆகவும், மேல்நிலை வகுப்புகள் மற்றொரு ஷிப்ட்டிலும், அதாவது காலை எட்டு முதல் மதியம் ஒரு மணி வரை முதல் ஷிப்ட், மதியம் ஒன்று முதல் மாலை, ஆறு மணி வரை மற்றொரு ஷிப்ட் நடத்தவும், சனிக்கிழமைகளிலும் விடுப்பு இன்றி பாடம் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இம்முறைக்கு அனுமதிக்க வேண்டும். ஆசிரியர்களிடம் இதுகுறித்து பேசி உள்ளோம்' என்றார்.
கலெக்டர் பிரபாகர் கூறியதாவது:இரண்டு மாதத்தில் கட்டுமான பணிகளை முழுமையாக முடிக்க, நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை ஷிப்ட் முறையில் வகுப்புகளை நடத்தலாம். எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி., தொகுதி வளர்ச்சி மேம்பாட்டு நிதியின் கீழ், 55 லட்சம் ரூபாய் மதிப்பில் வகுப்பறை கட்டிடம் கட்டப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.எனவே, ஓரிரு நாட்களில் அந்தியூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி நேரம் மாற்றப்படும். கட்டுமான பணிகள் நிறைவு பெறும் வரை, புதிய நேரத்தின் படி பள்ளி செயல்படும் என்பது உறுதியாகி உள்ளது.
No comments:
Post a Comment