விருதுநகரில் அரசு கலைக் கல்லூரி போதுமான எண்ணிக்கையில் இல்லாததால் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வி பயில முடியாமல் தவித்து வருகின்றனர்.
ஏட்டுப் படிப்பு ஏழை, எளிய மாணவர்களுக்கு எட்டாக் கனியாக இருந்த காலத்தில் கிராமங்கள் தோறும் பள்ளிகள் திறந்து ஏழை மாணவர்களுக்கு கல்விக் கண் திறந்தவர் காமராஜர். அவர் பிறந்த விருதுநகர் மாவட்டத்தில் தற்போது 90 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 48 அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் உட்பட மொத்தம் 200 மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.
ஆண்டுக்கு சுமார் 24 ஆயிரம் மாணவ, மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதுகின்றனர். ஆனால் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளும் உயர் கல்வி பயில்கின்றனரா? என்பது கேள்விக்குறியே. காரணம் 200 மேல்நிலைப் பள்ளிகள் உள்ள விருதுநகர் மாவட்டத்தில் 3 அரசு கலைக் கல்லூரிகள் மட்டுமே உள்ளன.
கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரான ஆர்.பி. உதயகுமார் முயற்சியால் சாத்தூரில் 2011-ம் ஆண்டிலும், வைகைச்செல்வன் அமைச்சராக இருந்தபோது அருப்பு க்கோட்டையிலும், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வெற்றி பெற்ற தொகுதியான சிவகாசியிலும் 2012-ல் அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன.
ஆனாலும், இக்கல்லூரிகளில் இதுவரை முழு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. வழக்கமான பாடப் பிரிவுகளுடன் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தக் கூடிய வணிகம் சார்ந்த பாடப் பிரிவுகள் தொடங்கப்படவில்லை என்பது மாணவர்கள், பெற்றோரின் குற்றச்சாட்டு.
விருதுநகரில் கடந்த ஆட்சியில் அமைச்சர் தொகுதிகளில் மட்டுமே அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன.
ஆனால், மாவட்டத் தலை நகரான விருதுநகரில் இதுவரை அரசு கலைக் கல்லூரி தொடங் கப்படாததால் இப்பகுதி ஏழை, எளிய மக்கள் மனவருத்தம் அடைந்துள்ளனர்.
அரசு கலைக் கல்லூரி இல் லாததால் விருதுநகர், திருவில்லிபுத்தூர், ராஜபாளையம், திருச்சுழி, வத்திராயிருப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் சேர்ந்து உயர் கல்வி பயில முடியாமல் தவித்து வருகின்றனர்.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் கர்ணன் கூறியதாவது:
கல்வி என்பது உரிமை. அதை தரமாகவும், இலவசமாகவும் வழங்குவது அரசின் கடமை. பள்ளிப்படிப்பை முடிக்கும் ஏழை, எளிய மாணவர்கள் உயர் கல்வி பயில தனியார் கல்லூரிகளை நாடிச்செல்ல வேண்டியுள்ளது. அவ்வாறு சேர்ந்தாலும் சில மாண வர்களால் படிப்பைத் தொடர முடிவதில்லை.
குடும்ப வறுமை காரணமாக படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு வேலைக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். எனவே மாவட்டத் தலைநகரான விருதுநகரிலும், திருவில்லிபுத்தூர், ராஜபாளையத்திலும் அரசு கலைக் கல்லூரிகள் தொடங்க அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment