புதுவை ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
புதுவை ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் புதுவை வளாகம் மற்றும் காரைக்கால் வளாகம் ஆகியவற்றை சேர்த்து எம்.பி.பி.எஸ். படிப்புக்கான 200 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான
மாணவர் சேர்க்கை, நுழைவுத் தேர்வு மூலம் நடைபெறும்.
இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் 75 நகரங்களில், 270 மையங்களில் நடைபெற உள்ளது. இதில் புதுவையைச் சுற்றி மட்டும் 9 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
காலை, மாலை என இரு பிரிவுகளாக தேர்வுகள் நடைபெறும். இத்தேர்வை நாடு முழுவதும் மொத்தம் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 193 மாணவர்கள் எழுதுகின்றனர். புதுவையில் மட்டும் 3,098 பேர் எழுதுகின்றனர்.
புதுவை ஜிப்மர் வளாகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் 150 இடங்கள் உள்ளன. இதில் 40 இடங்கள் புதுவை மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
அதேபோல காரைக்கால் வளாகத்தில் உள்ள 50 இடங்களில் 14 இடங்கள் புதுவைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காரைக்கால் வளாகம் இந்த ஆண்டுதான் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நுழைவுத் தேர்வு முடிவுகள் ஜூன் 13ஆம் தேதி வெளியிடப்படும். தேர்வில் வெற்றி பெறுவோருக்கான கலந்தாய்வு ஜூன் 20 முதல் 22ஆம் தேதி வரை நடைபெறும்.
இது குறித்து நுழைவுத் தேர்வு பொறுப்பாளர் டாக்டர் சாமிநாதன் கூறுகையில், தேர்வு மையங்களில் மாணவர்களின் வருகைப் பதிவு பயோமெட்ரிக் முறையில் மேற்கொள்ளப்படும். தேர்வு அறையில் செல்லிடப் பேசிகளுக்கு அனுமதி கிடையாது. மேலும் தேர்வு மையத்தில் செல்லிடப்பேசி சிக்னலை தடுக்கும் கருவிகள் (ஜாமர்) நிறுவப்படும் என்றார் அவர்.
No comments:
Post a Comment