பணத் தட்டுப்பாட்டு பிரச்சினையை தீர்க்கும் வகையில் புதிய 20, 50 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதே சமயம் ஏற்கெனவே புழக்கத்தில்
உள்ள பழைய ரூபாய் நோட்டுகளும் செல்லுபடியாகும் என்றும் தெரிவித்துள்ளது.
பண மதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களது அன்றாட செலவுகளுக்கே பணம் எடுக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர். மேலும் மாதத்தின் முதல் வாரம் என்பதால் சம்பள பணத்தை எடுப்பதற்காக அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் வங்கிகள், ஏடிஎம் மையங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
இதனால் பணப் புழக்கத்தை அதிகப்படுத்தும் வகையில் புதிய 20, 50 ரூபாய் நோட்டுகளை விரைவில் வெளியிடப் போவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், ''ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள 20, 50 ரூபாய் நோட்டுகள் போன்ற வடிவமைப்பிலேயே புதிதாக வெளியிடப்படவுள்ள நோட்டுகளும் இருக்கும். பழைய நோட்டுகளில் இருக்கும் பாதுகாப்பு அம்சங்களும் இதில் இடம்பெற்றிருக்கும். இந்த புதிய நோட்டுகளில் ரிசர்வ் வங்கி ஆளுநர் ஊர்ஜித் படேலின் கையெழுத்தும் இடம்பெற்றிருக்கும். புதிய 20, 50 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் முடிவு ஏற்கெனவே எடுக்கப்பட்டதுதான்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment