சென்னை: ஆதார் எண் பதிவு செய்த குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இலவச வேட்டி, சேலை வழங்கப்பட உள்ளதாக வருவாய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், ஆதார் எண்ணை பதிவு செய்யாதவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு சார்பில் இலவச வேட்டி, சேலை வழங்கப்படும். இதற்காக கூட்டுறவு சங்கங்களிடம் இருந்து வேட்டி, சேலைகள் மொத்தமாக கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். தமிழகத்தில் 2 கோடியே 2 லட்சத்து 52 ஆயிரத்து 166 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இதில், திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 5.06 லட்சம் குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. வரும் 2017ம் ஆண்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இலவச வேட்டி, சேலைகள் தற்போது தாலுகா அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அங்கிருந்து அனைத்து கிராமங்களுக்கும் டிராக்டர்கள் மூலம் இலவச வேட்டி, சேலைகள் அனுப்பி வைக்கப்பட்டு, ஊராட்சி அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், குடும்ப அட்டையுடன் ஆதார் எண் பதிவு செய்த குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே இலவச வேட்டி, சேலை வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
இது, ஆதார் அடையாள அட்டை இன்னும் எடுக்காத மற்றும் குடும்ப அட்டையுடன் பதிவு செய்யாத குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தமிழகம் முழுவதும் ரேஷன் கார்டுடன் ஆதார் எண் இணைக்கும் பணி 70 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. இதில் ஆதார் எண் பதிவு சமர்ப்பித்தவர்கள் கணக்கெடுக்கப்பட்டு அந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும் பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி, சேலை வழங்கப்பட உள்ளது,’ என்றார்.
No comments:
Post a Comment