பள்ளிகளுக்கான அறிவியல் கல்வியை சீர்திருத்தம் செய்ய வேண்டும் தேசிய அறிவியல்–கணித கண்காட்சியில் சித்தராமையா பேச்சு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, December 14, 2016

பள்ளிகளுக்கான அறிவியல் கல்வியை சீர்திருத்தம் செய்ய வேண்டும் தேசிய அறிவியல்–கணித கண்காட்சியில் சித்தராமையா பேச்சு

பள்ளிகளுக்கான அறிவியல் கல்வியை சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று முதல்–மந்திரி சித்தராமையா கூறினார்.
அறிவியல்–கணித
கண்காட்சி
கர்நாடக அரசின் கல்வித்துறை, கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி தேசிய குழு ஆகியவை சார்பில் 43–வது ஜவஹர்லால் நேரு தேசிய அறிவியல்–கணித சுற்றுச்சூழல் கண்காட்சி பெங்களூரு–துமகூரு ரோட்டில் உள்ள சர்வதேச கண்காட்சி அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்–மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு கண்காட்சியை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசியதாவது:–
அறிவியலை சோதனை கூடத்தில் மட்டுமே வைக்காமல், அதை மக்களிடம் கொண்டு வர வேண்டும். மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையில் அறிவியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டியது அவசியம். சமீபகாலமாக மாணவர்களிடையே அறிவியல் துறை தொடர்பான ஆர்வம் அதிகரித்து உள்ளது. இதற்கு வசதியாக பாடத்திட்டத்துடன் அறிவியல் தொடர்பான விஷயங்களை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பயிற்றுவிக்க வேண்டும்.
நல்ல வரவேற்பு கிடைக்கும்
இதனால் காலநிலை மாற்றம், உணவு பதப்படுத்துதல், உயிரி தொழில்நுட்பம், பசுமை எரிபொருள், பேரிடர் நிர்வாகம், தகவல் மற்றும் தொழில்நுட்பம், போக்குவரத்து உள்பட பல்வேறு சவால்களை எதிர்கொள்ள மாணவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். மைசூருவில் நடைபெற்ற தேசிய அறிவியல் மாநாட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேபோல் இந்த அறிவியல் கண்காட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.
அறிவியல் திறன் அதிகமாக உள்ள குழந்தைகள் கேள்வி கேட்பது, ஆழ்ந்து யோசிப்பதை நிறுத்தவே மாட்டார்கள். குழந்தைகளிடம் அறிவியல் திறனை வளர்க்கும் விதத்தில் இதுபோன்ற கண்காட்சிகளை ஏற்பாடு செய்வது என்பது அரசின் கடமை ஆகும். அறிவியலை படிக்கும் ஆர்வத்தை வாழ்க்கையின் தொடக்கத்திலேயே தொடங்க வேண்டும். குழந்தைகள் எப்போதும் மலர்கள், மரங்கள், பறவைகள், பூச்சிகளின் செயல்பாடுகளை கவனிக்கிறார்கள். அவர்களின் அறிவியல் ஆர்வத்தை நாம் வளர்க்க வேண்டும்.
அறிவியல் கல்வி சீர்திருத்தம்
பள்ளிகளுக்கான அறிவியல் கல்வியை சீர்திருத்தம் செய்ய வேண்டியது அவசியம். இதன் மூலம் பயிற்றுவித்தலை மேம்படுத்துதல், அறிவியல் பாடம், அறிவியல் ஆசிரியர்களை ஊக்குவிப்பது, குழந்தைகளை ஆரம்ப காலத்திலேயே அறிவியல் பக்கம் கொண்டுவரும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நமது நாட்டில் அறிவியல் திறமை வாய்ந்தவர்கள் அதிகமாக உள்ளனர்.
கர்நாடகத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால், இந்திய அறிவியல் அமைப்பு, இஸ்ரோ, எச்.ஏ.எல்., பி.இ.எல்., எம்.ஏ.எல்., நிமான்ஸ் உள்பட பல பெரிய நிறுவனங்கள் இங்கே தொடங்கப்பட்டன. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் விஸ்வேஸ்ரய்யா, ராஜா ராமன்னா, அப்துல் கலாம், சி.என்.ஆர்.ராவ் உள்பட ஏராளமானவர்கள் முக்கிய பங்காற்றி உள்ளனர். விண்வெளி துறையில் கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ், ராகேஷ் சர்மா, ரவீஸ் மல்கோத்ரா உள்பட ஏராளமானவர்கள் தங்களின் பங்கை ஆற்றியுள்ளனர்.
அறிவியல் மையங்கள்
கர்நாடகத்தில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அறிவியல் மற்றும் கணிதத்தை பயிற்றுவிக்க தேவையான நடவடிக்கையை மாநில அரசு எடுத்து வருகிறது. எங்கள் மாநிலத்தில் பள்ளி குழந்தைகள் பயன் பெறுவதற்காக பல்வேறு இடங்களில் அறிவியல் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் அரசு–தனியார் பங்களிப்பில் நிறுவப்பட்டுள்ளன.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.
இந்த விழாவில் பள்ளி கல்வித்துறை மந்திரி தன்வீர்சேட் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கண்காட்சி 18–ந் தேதி வரை நடைபெறுகிறது. அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ–மாணவிகள் இந்த கண்காட்சியை பார்க்க தேவையான ஏற்பாடுகளை கல்வித்துறை செய்துள்ளது.

No comments:

Post a Comment