காசோலைகள் அல்லது வங்கிக் கணக்கில் மின்னணுப் பரிமாற்றம் மூலம் ஊழியர்களுக்கு தொழில் நிறுவனங்கள் ஊதியம் வழங்குவது தொடர்பாக அவசரச் சட்டம் கொண்டு வருவதற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
1936-ஆம் ஆண்டைய ஊதியங்கள் வழங்கும் நடைமுறைச் சட்டத்தில், தொழில் நிறுவனங்கள் தங்களிடம் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவர்களுக்கான ஊதியத்தை நாணயமாகவோ அல்லது ரூபாய் நோட்டுகளாகவோ அல்லது இரண்டும் சேர்த்தோ வழங்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, அண்மையில் நிறைவடைந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில், மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா "2016-ஆம் ஆண்டைய ஊதியம் வழங்கும் நடைமுறை (சட்டத் திருத்த) மசோதா'வை தாக்கல் செய்தார். அந்த மசோதாவில், ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் 1936-ஆம் ஆண்டு சட்டத்தின் 6-ஆவது பிரிவில், தொழில் நிறுவனங்கள் தங்களிடம் பணிபுரியும் ஊழியர்களுக்கு காசோலை அல்லது வங்கிக் கணக்கில் மின்னணு முறை மூலம் ஊதியத்தை டெபாசிட் செய்யும் வகையில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சட்டத் திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது, ரூ.500, ரூ.1,000 ஆகிய உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்ட விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் அந்த மசோதா மீது விவாதம் நடத்தவோ அல்லது அதை நிறைவேற்றவோ இயலவில்லை.
இந்நிலையில், தில்லியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், தொழில் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு காசோலைகள் மூலமாகவோ அல்லது வங்கிக் கணக்குகளில் நேரடியாக மின்னணுப் பரிமாற்ற முறையிலோ ஊதியம் வழங்குவதற்கு வழியேற்படுத்தும் வகையில் அவசரச் சட்டம் கொண்டு வருவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த அவசரச் சட்டத்தில், ஊழியர்களுக்கு ரொக்கமாகவும் ஊதியத்தை வழங்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போதைய நடைமுறைப்படி, அவசரச் சட்டம் என்பது 6 மாத காலத்துக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதற்குள் நாடாளுமன்றத்தில் அவசரச் சட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் 1975-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தம் மூலம், ஊழியர்களின் ஒப்புதல் பெற்று, அவர்களுக்கு காசோலை மூலமாகவோ அல்லது வங்கிக் கணக்குகளிலோ ஊதியத்தை செலுத்தும் நடைமுறை சேர்க்கப்பட்டது.
No comments:
Post a Comment