அரசு மானியங்கள், சலுகைகள் மற்றும் சேவைகளைப் பெற ஆதார் எண் கட்டாயமில்லை. அடையாளச் சான்றுக்கு மாற்று
ஆவணங்களையும் சமர்ப்பிக்கலாம் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறை இணை அமைச்சர் பி.பி.சவுத்தரி மக்களவையில் நேற்று இதுகுறித்து தெரிவிக்கும்போது,
‘அரசு மானியங்கள், சலுகைகள் மற்றும் சேவைகளைப் பெறும்போது, ஆதார் எண் இல்லாத தனிநபர்கள், தங்களிடம் உள்ள அனுமதிக்கப்பட்ட மாற்று ஆவணங்களை அடையாளச் சான்றாக பயன்படுத்திக்கொள்ள ஆதார் சட்டத்தின் 7-வது பிரிவு அனுமதி வழங்குகிறது.
கடந்த 2015 அக்டோபர் 15-ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிலும், இவ்விஷயத்தில் நீதிமன்றம் இறுதி முடிவு எடுக்கும் வரை, ஆதார் எண்ணை கட்டாயமாக்கக் கூடாது என குறிப்பிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மத்திய அரசு முழுமையாக பின்பற்றி, அரசு திட்டங்கள் எதற்கும் அதன் பயனாளிகளிடம் இருந்து அடையாளச் சான்றாக ஆதார் எண்ணை வழங்குமாறு கட்டாயப்படுத்துவதில்லை’ என்றார்.
பொது வினியோக திட்டம், சமையல் எரிவாயு மானியம் போன்றவை தவிர வேறு காரணங்களுக்காக ஆதார் எண் பயன்படுத்தப்படாது என முன்னர் அறிவிக்கப்பட்டது. எனினும், ஊரக வேலை உறுதி திட்டம், முதியோர், விதவை மற்றும் மாற்றுத் திறனாளி ஓய்வூதிய திட்டங்கள், ஜன் தன் போன்ற பல திட்டங்களுக்கு ஆதார் எண் பயன்பாடு விரிவுபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment