2016-ம் ஆண்டு சுற்றுச்சூழல் ரீதியாக மிக மோசமான ஆண்டாகத் திகழ்கிறது, புவிவெப்பம், கடல்நீர் மட்டம், காற்றில் மாசு, வளிமண்டலத்தில் வெப்பத்தைத் தக்கவைக்கும்
வெப்பவாயு வெளியேற்றம் ஆகியவற்றில் 2016-ம் ஆண்டு புதிய உச்சங்களைச் சந்தித்துள்ளது என்று உலக பருவநிலை அறிக்கை தெரிவிக்கிறது.
முக்கியமான வெப்ப அறிகுறிகள், பருவநிலை அறிகுறிகள் காட்டுவதென்னவெனில் பூமி இன்னும் அதிகமாக வெப்பமாகிக் கொண்டிருக்கிறது என்பதையே. குறிப்பாக மெக்சிகோ, இந்தியாவில் அதிக வெப்ப அளவுகள் பதிவாகியுள்ளன.
“கடந்த ஆண்டின் சாதனை வெப்பம் நீண்டகால புவிவெப்பமடைதல், மற்றும் வலுவான எல் நினோ விளைவு ஆகியவற்றினால் ஏற்பட்டதே” என்கிறது இந்த அறிக்கை.
நிலம் மற்றும் கடல் வெப்ப அளவு, வான்வெளியில் பசுமை இல்ல வாயு அதிகரிப்பு ஆகியவை ஓராண்டில் முந்தைய நிலவரங்களை பெரிய அளவில் முறியடித்துள்ளதாக உலக பருவநிலை ஆண்டறிக்கை எச்சரித்துள்ளது.
அதிபர் டோனல்டு ட்ரம்ப் 2015 பாரிஸ் பருவ நிலை ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்த பிறகு இந்த அபாயகரமான புவிவெப்ப செய்தி அறிக்கை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. கோடீஸ்வர ட்ரம்ப் பருவநிலை மாற்றம் என்பது சீனா கண்டுபிடித்த ஒரு வதந்தி என்றும் மனித தொழிற்துறை உற்பத்தி நடவடிக்கைகளினால் வெப்பநிலை அதிகரிப்பு என்பதெல்லாம் வெறும் பொய் என்றும் ட்ரம்ப் தொடர்ந்து வாதிட்டு அறிவியல் ஆதாரங்களையும் மறுதலித்து வந்துள்ளார்.
ஆனால் படிம எரிபொருள்களின் தேவைகளிலிருந்து மானுட உலகம், கார்ப்பரேட் உலகமும் இன்னமும் வெளிவரவில்லை. இதனால் கரியமில வாயு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு ஆகிய வெப்ப வாயுக்களின் வெளியேற்றம் அபாயகரமாக அதிகரித்துள்ளது. வளிமண்டலத்தில் கரியமிலவாயுவின் அடைவு மில்லியனுக்கு 402.9 பகுதிகளாக உள்ளது, இது நவீன யுகத்தில் முதல் முறையாக 400-ஐக் கடந்துள்ளது.
சுமார் 500 விஞ்ஞானிகளின் ஆய்வுகளின் படி வெளியிடப்படுள்ள இந்த 280 பக்கங்கள் கொண்ட உலக பருவநிலை அறிக்கை ஆன்லைனில் வாசிக்கக் கிடைக்கிறது.
பனிச்சிகரங்களிலிருந்து பனி உருகுதல், துருவங்களில் பனிப்பாறைகள் அழிந்து, உருகுவருதல், ஆகியவற்றினால் 2016-ல் கடல் நீர்மட்டம் இதுவரை இல்லாத அளவுக்கு சாதனையான 3.25 அங்குலங்கள் அதிகரித்துள்ளது, இது 1993 சராசரியை விட அதிகம். தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் உலக கடல் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. மேற்கு பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நீர்மட்டம் நன்றாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கவனத்துக்குரிய துருவப்பகுதிகளில் ஆர்ட்டிக், அண்டார்டிகா ஆகியவற்றில் பனிப்பாறைகளின் இருப்பு குறைந்து கொண்டே வருகிறது. அப்பகுதிகளில் நில வெப்ப நிலையும் அதிகரித்துள்ளது. ஆர்ட்டிக் நிலப்பகுதியின் வெப்ப அளவு சராசரியாக 2.0 டிகிரி செல்சியஸ், இது 1981-2010 காலக்கட்டங்களில் இருந்ததை விட அதிகம். வெப்ப அளவு பதிவுசெய்யத் தொடங்கிய ஆண்டான 1900-ம் ஆண்டை ஒப்பிடும்போது துருவங்களில் வெப்ப நிலை 3.5 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது.
இதன் விளைவாக கடும் சூறாவளிகள் 2016-ல் அதிகரித்தன. பெயரிடப்பட்ட 93 சூறாவளிக்காற்றுகள் கண்டங்களை புரட்டி எடுத்துள்ளன. 1981-2010 ஆண்டுகளில் 82 கடும் சூறாவளிகளே உருவானது. வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் கடந்த ஏப்ரலில் 44 டிகிரி செல்சியஸ் வரைச் சென்றது, இதனால் சுமார் 330 மில்லியன் மக்கள் குடிநீரின்றி தவித்தனர், 300 பேர் வெப்பத்துக்குப் பலியாகினர்.
No comments:
Post a Comment