தமிழ்நாட்டில் அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் மொத்தம் 518 உள்ளன.
இவற்றின் மூலம் 1 லட்சத்து 75 ஆயிரம் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் அண்ணா பல்கலைகழகம் நடத்தும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.
இந்த ஆண்டு பொதுப் பிரிவு கலந்தாய்வு கடந்த மாதம் 23-ந்தேதி தொடங்கியது. வழக்கமாக மருத்துவ கவுன்சிலிங் தொடங்கிய பிறகுதான் பொறியியல் கலந்தாய்வு நடைபெறும்.
நீட் தேர்வு விவகாரத்தால் மருத்துவ கலந்தாய்வு தொடங்குவது தாமதமாகி வருகிறது. இதனால் பொறியியல் கலந்தாய்வு தொடங்கப்பட்டு நாளை மறுநாள் (11-ந்தேதி) நிறைவு பெறுகிறது.
இன்றுடன் 3 நாட்கள் மட்டுமே கலந்தாய்வு நடைபெறுகிறது. என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான ஆர்வம் கடந்த சில ஆண்டுகளாக படிப்படியாக குறைந்து வருகிறது. என்ஜினீயரிங் படித்து முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாததே இப்படிப்பின் மீது இருந்த மோகம் குறைய காரணமாக உள்ளது.
ஆண்டு தோறும் 2 லட்சம் பேர் படித்து விட்டு வருபவர்களுக்கு உரிய சம்பளத்தில் வேலை கிடைப்பது இல்லை. வெளி மாநிலங்களில் மட்டுமின்றி அயல்நாடுகளிலும் வேலை வாய்ப்பு குறைந்ததால் பொறியியல் படிப்பில் சேர முன்வரவில்லை.
இதே நிலைதான் இந்த ஆண்டும் நீடிக்கிறது. கலந்தாய்வு தொடங்கியது முதலே மந்தமான நிலை காணப்பட்டது. கலந்தாய்வில் பங்கேற்காதவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.
ஆப்சென்ட் 20 சதவீதம் தொடங்கி நேற்று வரை 42 சதவீதமாக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 42.05 சதவீதமாக இது அதிகரித்துள்ளது. இதுதான் அதிகபட்சம் ஆப்சென்ட் ஆகும்.
இதுவரையில் நடந்த கலந்தாய்விற்கு ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 270 பேர் அழைக்கப்பட்டனர். இதில் 40,634 பேர் கலந்து கொள்ளவில்லை. 75, 117 பேருக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒருலட்சத்து 339 இடங்கள் நேற்று வரை காலியாக உள்ளன. மேலும் 3 நாட்கள் கலந்தாய்வு மூலம் சுமார் 12 ஆயிரம் இடங்கள் நிரம்பினாலும் கூட 88 ஆயிரம் இடங்கள் நிரம்ப வாய்ப்பு இல்லை.
தொடர்ந்து நடைபெறும் துணை கலந்தாய்வில் 1000-க்கும் குறைவான மாணவர்கள் சேர்ந்தாலும் 87 ஆயிரம் இடங்கள் இந்த ஆண்டு காலியாக இருக்கும். மேலும் மருத்துவ கலந்தாய்வு அடுத்தவாரம் தொடங்கியவுடன் பொறியியல் படிப்பில் சேர்ந்த 5 ஆயிரம் மாணவ-மாணவிகள் மீண்டும் மருத்துவ படிப்பிற்கு தாவ இருக்கிறார்கள்.
இதனால் அந்த இடங்களும் காலியாக மாறும் நிலை உள்ளது. இதன் காரணமாக இந்த வருடம் பொறியியல் கல்லூரிகளில் அரசு இடங்கள் சுமார் 90 ஆயிரத்திற்கும் மேலாக நிரம்பாமல் போகக் கூடும்.
பெரும்பாலான தனியார் சுயநிதி கல்லூரிகளில் மிக குறைந்த அளவிலேயே இடங்கள் நிரம்பி உள்ளன. சிறந்த கட்டமைப்பு, ஆய்வகங்கள், நூலகங்கள், பேராசிரியர்கள் கொண்ட ஒரு சில கல்லூரிகளில் மட்டுமே முழுமையாக இடங்கள் நிரம்பி உள்ளன.
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள சிறந்த கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மட்டுமின்றி நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களும் நிரம்பி உள்ளன. அதே நேரத்தில் மற்ற மாவட்டங்களில் தனியார் கல்லூரிகளில் மிக குறைந்த அளவிலேயே மாணவர்கள் சேர்ந்து இருப்பதால் கல்லூரிகளை தொடர்ந்து நடத்த முடியாத நிலை உருவாகி அவை மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களாக போதுமான அளவு மாணவர்கள் சேராததால் கல்லூரியை நடத்த முடியாத நிலையில் நிர்வாகம் தத்தளிக்கின்றன.
இந்த நிலையில் இந்த வருடம் காலி இடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தனியார் பொறியியல் கல்லூரிகளை மேலும் கவலை அடையச் செய்துள்ளது.
குறைந்த அளவு மாணவர்களை கொண்டு பல ஆண்டுகளாக நஷ்டத்தில் நடத்தி வரும் தனியார் கல்லூரி உரிமையாளர்கள் அவற்றின் நிர்வாக செலவை மேற்கொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள். தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வந்த கல்லூரிகளை மூடவும் முடிவு செய்து கடிதமும் கொடுத்து இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment