11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடக்குமா? - உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, August 9, 2017

11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடக்குமா? - உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு.

11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடக்குமா? - உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு.

தமிழகத்தில் 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவது
தொடர்பான அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:  தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டிலிருந்து 11-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற மாணவர்கள் கடுமையாக உழைக்கும் நிலையில், 11-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தினால் மாணவர்கள், பெற்றோர் பாதிக்கப்படுவர். இதனால் மாணவர்கள் தொடர்ந்து 3 ஆண்டுகள் பொதுத்தேர்வுக்காக கடினமாக உழைக்க வேண்டியது வரும். இதனால் மாணவர்களுக்கு மன உளைச்சல் அதிகமாகும். எனவே, அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. பள்ளிக்கல்வித் துறை தாக்கல் செய்த பதில்மனுவில், ‘12-ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே, மருத்துவம், பொறியியல், சட்டம், வேளாண் உள்ளிட்ட உயர்கல்வி இடங்கள் நிரப்பப்படுகின்றன. இதனால், பள்ளிகளில் 12-ம் வகுப்பு பாடங்களே 2 ஆண்டுகளும் நடத்தப்படும் சூழல் அதிகரித்துள்ளது.அடிப்படையான 11-ம் வகுப்பு பாடங்கள் புறக்கணிக்கப்படுவதால், உயர்கல்வி முதல் பருவத்தில் பெரும்பாலான மாணவர்கள் தோல்வியடைகின்றனர்.
சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் 40 சதவீதத்துக்கும் அதிக வினாக்கள் 11-ம் வகுப்பு பாடத்தில் இருந்தே கேட்கப்பட்டன. ஆந்திரா, கேரளா மாநிலங்களில் 11-ம் வகுப்புபொதுத் தேர்வாக நடத்தப்படுகிறது. இது, போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள உதவும். நிபுணர் குழு அமைத்து, ஆய்வு மேற்கொண்ட பிறகே இந்த அரசாணை வெளியிடப்பட்டது’ என கூறப்பட்டது. பின்னர், நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment