நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் உபரி ஆசிரியர்களின் எதிர்காலம் என்ன? பயத்தில் ஆசிரியர்கள்AIDED SCHOOL TEACHERS DEPUTED TO GOVT SCHOOLSகடந்த மாதம் நடைபெற்ற கல்வித்துறை அதிகாரிகள் மட்ட மீளாய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளில் ஒன்று .நிதிஉதவி பெறும்
பள்ளிகளில் மாணவர்களின் எண்னிக்கை குறைவு காரணமாக ஆசிரியர்கள் உபரியாக பணியாற்றும் நிலையினைக்கருத்தில் கொண்டு உபரியாக உள்ளஇடைநிலை ஆசிரியர்களை ,ஊராட்சி ஒன்றிய /நகராட்சி தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணீயிடங்களில் தற்காலிகமாக மாற்றுப்பணிபுரிய (Deputation) நியமிப்பது என்பதாகும்.
இதனடிப்படையில் திருவண்ணாமலை மாவட்ட்டத்தில் நிதி உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் என கண்டறியப்பட்ட ஆசிரியர்கள் ,ஊராட்சி ஒன்றிய /நகராட்சி தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடத்தில் மாற்றுப்பணிபுரிய உத்திரவிட்டு,அவ்வாணை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை பொதுவாக வரவேற்கப்படவேண்டிய ஒன்று.
காரணம் போதிய மாணவர்கள் இல்லாத பள்ளியில் ஆசிரியர்கள் மட்டும் பணியாற்றுவதும் அதற்கான ஊதியத்தை அவர்கள் பெறுகிறார்கள் என்பதும் நடைமுறைக்கு முரணானதே. மேலும் அவ்வாறு மாற்றுப்பணிபுரிய ஆணைபெற்ற ஆசிரியர்கள் பலரும் இதனை மனமுவந்தே ஏற்றனர் என்பதும் கண்கூடு. எனினும் இதனை ஓர் தற்காலிக தீர்வாக மட்டுமே நாம் கருதுகிறோம்.இதற்கான நிரந்தரத்தீர்வை அரசு எடுக்க வேண்டும் என்பதே நமது அவா,
ஏனெனில் மாற்றுப்பணிபுரிய உத்திரவிட்ட காலிப்பணியிடங்கள் அரசால் நிரப்பப்படும்போது இவ்வாசிரியர்களின் நிலை என்ன என்பதும் கேள்விக்குறியே.
மீண்டும் ஆசிரியர்கள் அவரவர் தாய்ப்பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டால் அப்போதும் உபரி ஆசிரியர்களின் நிலை என்ன? மேலும் தற்போது மாற்றுப்பணி புரியும் இடத்தில் ஆசிரியர்களால் மாணவர்களுக்கோ, மாணவர்களால் ஆசிரியருக்கோ, பள்ளி நிர்வாகத்தினை நடைமுறைப்படுத்துவதில் தலைமை ஆசிரியருக்கும் பிற ஆசிரியருக்கும்,மற்றும் ஊர் பொதுமக்களால் ஏற்படும் பிரச்சினைகள் போன்ற காரணங்களால் ஏதாவது எழும் பிரச்சினை காரணமாக அவ்வாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டிய சூழல் ஏற்படின் , அதனை நடைமுறைப்படுத்துவது கல்வித்துறை அதிகாரிகளா? அல்லது அவர் சார்ந்த பள்ளியின் தாளாளரா என்பதில் பெரும் குழப்பம் நேரிட வாய்ப்புள்ளதாக நாம் கருதுகிறோம்.
அதுமட்டுமில்லாமல் மாற்றுப்பணி என்பதால் ஆசிரியர் ,’தான் எத்தனைக்காலம் இப்பள்ளியில் பணிபுரிவோம்’ என்பது அவருக்கே தெரியாத நிலை.மேலும் இது ’தன் பள்ளியல்ல’ என்ற மனநிலையால் கொடுக்கப்பட்ட பணியினை சிறப்பாக செயதில் சுணக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.மேலும் ’இங்கு வேறு ஒருவர் நியமிக்கப்பட்டால் ,நம் பணி அடுத்து எங்கே’ என்ற ஒரு வித இரண்டும் கெட்டான் மன நிலையுடன் , பணிப்பாதுகாப்பு இல்லாத ஒருவித பயத்துடன் பணியாற்ற வேண்டிய கட்டாய நிலைக்கு அவ்வாசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இக்காரணங்களை கருத்தில் கொண்டு தொடக்கக்கல்வித்துறை இப்பயத்தினை போக்கும் நிலையை மேற்கொள்ள வேண்டும் என்பதே நம் கோரிக்கையாகும். கல்வித்துறையில் பல மாற்றங்களை செயல்படுத்திவரும் மாண்புமிகு அமைச்சர்,மதிப்புமிகு கல்வித்துறை செயலர், மரிஒயாதைக்குரிய தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோர் ஒன்றிணைந்து ஆலோசித்து இப்பிரச்சினைக்கு தீர்வுகாணவேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு. ஆசிரியர்கள் உபரியாக பணியாற்றும் பள்ளிகள் அடையாளம் காணப்பட்டு, அப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் விருப்பத்தின் அடிப்படையில்,எட்தனை பணியிடம் உபரி என கணக்கிடப்பட்டதோ அதற்கேற்றார்போல் விருப்பம் தெரிவித்தா அசிரியர்களில் பணியில் மூத்தோரை அரசுப்பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு நிரந்தரமாக பணிமாற்றம் செய்வதே (பணி ஈர்ப்பு) இதற்கு நிரந்தர் தீர்வாக அமையும்.
மூத்தோரை ஈர்க்க கோருவதன் அவசியம் என்னவெனில் இவ்வாண்டு பணியில் இளையோர் பணிமாற்றம் செய்யப்பட்டால் அவர் ஒன்றியப்பள்ளியில் இளையோராக கருதப்படுவர் ஆனால் எதிர்வரும் ஆண்டுகளில் இதேபோல் உபரி ஆசிரியர்கள் ஈர்க்கப்பட்டால் நிதி உதவிப்பள்ளியின் இன்றைய மூத்தோர் எதிர்வரும் காலத்தில் ஒன்றியத்தில் ஏற்கனவே பணி மாற்றம் பெற்ற இளையவரைவிட நிதி உதவிப்பள்ளியில் மூத்தவரான இவர் இளையவராக பணியேறகும் சூழல்கள் உருவாகும்.
எனவே இம்முரண்பாடுகள் ஏற்படாவண்ணம் அரசும். தொடக்கக்கல்வித்துறையும் இணைந்து தற்போது நிதி உதவி பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை நிரந்தரமாக அரசின் ஒன்றிய /நகராட்சி தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களில் பணி ஈர்ப்பு செய்து நியமித்திட வேண்டுகிறோம்.
அரசின் இந்த நடவடிக்கையால் நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பணிப்பாதுகாப்பு பேணிக்காப்பதுடன், அவர்களின் எதிர்கால வாழ்க்கை குறித்தான பயத்தினையும் போக்கும் என்பது மட்டுமல்லாது., மாணவர்கள் போதுமான எண்ணிக்கையுள்ள ஒன்றிய பள்ளிகளுக்கு உள்ள ஆசிரியர் தேவையினை உடனடியாக பூர்த்தி செய்திடும் வகையில் நிரந்திர தீர்வாக இது அமையும் என்பதால் இதனை நடைமுறைப்படுத்தவேண்டும் என்பதே நமது அவா,.
கல்விப்பணியும் மாணவர் நலமும் பேண ...... ..முடிவு அரசின் கைகளில்
very good notes for govt.
ReplyDelete