பொது விநியோக திட்டத்தில் அனைத்து பொருட்களும் தட்டுப்பாடின்றி வழங்கப்படும்: அமைச்சர் செல்லூர் ராஜூ
மதுரை பெத்தானியாபுரத்தில் ரூ. 8 லட்சத்து 60 ஆயிரம் செலவில் சலவைக் கூடமும், பல்லவன் நகரில் ரூ. 3 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் பாலமும் கட்டப்பட்டு உள்ளன.
இவற்றின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. மாநகராட்சி கமிஷனர் அனீஷ் சேகர் தலைமை தாங்கினார்.
விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பாலம் மற்றும் சலவைக்கூடத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் மட்டும் தான் பொது விநியோக திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 1 கோடியே 96 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ விலையில்லா அரிசி தமிழகத்தில் தான் வழங்கப்படுகிறது.
பொது விநியோக திட்டத்தில் பொருட்கள் வழங்கப்படுவது நிறுத்தப்படும் என்று சிலர் வதந்தியை பரப்புகின்றனர். இதனை யாரும் நம்ப வேண்டாம். அச்சப்பட தேவையில்லை.
அம்மாவின் வழிகாட்டுதலோடு நடைபெறும் இந்த ஆட்சியில் பொது விநியோக திட்டத்தில் பொது மக்களுக்கு தட்டுப்பாடின்றி பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இது உங்கள் அரசு. மக்களால் ஏற்படுத்தப்பட்ட அரசு. மக்கள் நலனை பாதுகாக்க அனைவரும் பாடுபட்டு வருகிறோம். ஆனால் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் விலையில்லா அரிசி திட்டத்தை குறை கூறி வருகிறார்.
மத்திய அரசின் உணவு பாதுகாப்பு திட்டம் கொண்டு வருவதற்கு முதல் காரணமே தி.மு.க. தான். ஆனால் இன்று மக்கள் நலனில் அக்கறை இருப்பது போல் மு.க. ஸ்டாலின் நீலி கண்ணீர் வடிக்கிறார். அவரது நாடகத்தை மக்கள் நம்ப தயாராக இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment