பெற்றோரிடமிருந்து ஆயிரக்கணக்கில் கல்விக் கட்டணம் வசூலித்தாலும் சுருங்கிப்போன வளாகமும் காற்றோட்டமற்ற வகுப்பறையுமாகத்தான் இருக்கின்றன சென்னையில் உள்ள பெரும்பாலான
தனியார் பள்ளிக்கூடங்கள். அவற்றுக்கு மத்தியில் பசுமையான மரங்களோடும் பரந்துவிரிந்த வளாகத்தோடும் 120 ஆண்டுகளுக்கும் மேலாக விளிம்புநிலையினரின் குழந்தைகளுக்குத் தரமான கல்வியை இலவசமாக வழங்கிவருகிறது சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஆல்காட் நினைவு மேல்நிலைப் பள்ளி.
சாந்தமும் கம்பீரமும் ஒருசேரப் பொருந்திய இப்பள்ளி சென்னை கல்வி வரலாற்றில் ஒரு மைல் கல். 1894-ல் இப்பள்ளிக்குச் சூடப்பட்ட ‘ஆல்காட் பஞ்சமர் இலவசப் பள்ளி’ என்கிற பெயரே அதன் பின்னணியைச் சொல்லும்.
1832-ல் நியூ ஜெர்சியில் பிறந்து கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்தார் ஹெண்ட்ரி ஸ்டீல் ஆல்காட். மேடம் பிளாவஸ்கியுடனான சந்திப்பு அவருக்குள் இருந்த தத்துவார்த்தத் தேடலுக்கு விடை அளிக்க இருவரும் இணைந்து பிரம்மஞான சபையை 1875-ல் நியூயார்க் நகரில் நிறுவினர்.
மதச்சார்பற்ற கல்வி
19-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே, ‘பம்பாய் கல்விக் கழகம்’ என்ற அமைப்பை நிறுவி ஐரோப்பிய முறையிலான கல்வியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது பிரிட்டிஷ் அரசு. இந்தியவாழ் ஐரோப்பியக் குழந்தைகளின் கல்வி வசதிக்காக ஆங்கில வழிக் கல்விக்கூடங்கள் நாடெங்கும் அப்போது திறக்கப்பட்டன. அதில் உயர் சாதி இந்தியக் குழந்தைகளும் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால், 1892-ல் அன்றைய அரசாங்கச் செயலாளர் சி.ஏ.கால்டன் பதிவிட்டதுபோல, ‘1855 வரை ஆங்கிலேயரின் இந்தியக் கல்வித் திட்டமானது தலித் மக்கள் பள்ளிக் கூடங்களை நெருங்கவிடாமலும் கல்வியில் அவர்களுக்குரிய பங்களிப்பை வழங்காமலும்தான் வைத்திருந்தது”.
தமிழக தலித் வரலாற்றில் பெரும் ஆளுமைகளான இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாச பண்டிதர் போன்ற சிலர் அன்றே கவனம் பெற்றிருந்தாலும் பெரும்பாலான தலித் மக்கள் கல்வி மறுக்கப்பட்டு சிதறிக்கிடந்தனர். ஆங்காங்கே சில கிறிஸ்தவ மிஷனரி அமைப்புகள் தலித் மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் விதமாகக் கல்வி அளித்தாலும், அதனுள் மதமாற்றம் என்கிற போக்கும் ஊடுருவியிருந்தது.
அந்நிலையில் மதச்சார்பின்மையோடு சென்னையின் ஒடுக்கப்பட்ட மக்களின் வாரிசுகளுக்குக் கல்விக் கதவைத் திறந்துவைத்தது, ‘ஆல்காட் பஞ்சமர் இலவசப் பள்ளி’. அதை நிறுவியது இந்தியரோ ஆங்கிலேயரோ அல்ல. அமெரிக்கரான ஹெண்ட்ரி ஸ்டீல் ஆல்காட். அடையாறில் உள்ள பிரம்மஞான சபையை (Theosophical Society) மேடம் பிளாவட்ஸ்கியுடன் இணைந்து நிறுவியவர் இவரே.
முன்னாள் மாணவரே ஆசிரியர்
பள்ளியைத் தொடங்கியதைவிட அதை நடத்துவது சவால் மிகுந்ததாக இருந்தது. காரணம், கற்றுத் தேர்ந்த இந்திய ஆசிரியர்களே தலித் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்க மறுத்தனர். அதனால் வேறுவழியின்றி கிறிஸ்தவ வேதாந்திகள்தான் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.
ஆனாலும், 1907-ல் ஆல்காட் இறந்தபோது, அப்பள்ளியின் முன்னாள் மாணவர் ஐயா கண்ணு அதில் ஆசிரியர் பணிக்கு நியமிக்கப்படும் அளவுக்குப் பள்ளி நிலைபெற்றது. இன்றும் இந்தப் பண்பாடு ஆல்காட் பள்ளியில் தொடர்கிறது. இப்போதைய தலைமை ஆசிரியரான லலிதா பள்ளியின் முன்னாள் மாணவியே.
பிரம்மஞான சபையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் இந்த இலவசத் தனியார் பள்ளி இன்று சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தைத்தான் பின்பற்றுகிறது. ஆனால், ஒரு நூற்றாண்டுக்கும் முன்னால் நிறுவப்பட்டபோது அன்றைய ஐரோப்பிய அல்லது அமெரிக்கக் கல்வித் திட்டத்தை அது நகல் எடுக்கவில்லை. ‘How We Teach The Pariah’ என்றே ஒரு நூல் எழுதப்பட்டு, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பிள்ளைகளை வளர்த்தெடுக்கத் தனித்துவமான பாடத்திட்டமும் வரையறுக்கப்பட்டது.
1906-ல் அப்பள்ளியின் கண்காணிப்பாளர் பொறுப்பை வகித்த கோர்ட்ரைட் என்ற பெண் இப்புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் இப்பள்ளியை ஆங்கில வழிப் பள்ளியாக நடத்தலாமா, தமிழ் வழிக் கல்வியைக் கற்பிப்பதுதான் சிறந்ததா?, அன்றைய மெட்ராஸ் கல்விக் கோட்பாடு முன்மொழியும் கல்விச் சட்டத்தில் எதைப் பின்பற்றலாம், எதை மறுக்க வேண்டியுள்ளது?, தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு எத்தகைய கல்வி அளிக்க வேண்டும் என்பது போன்ற பல கேள்விகள் எழுப்பப்பட்டுப் பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஓயாத ஆங்கில மோகம்
ஆரம்பத்தில் சென்னையில் ஐந்து இடங்களில் தொடங்கப்பட்ட பஞ்சமர் பள்ளி ஆல்காட் இறப்புக்குப் பிறகு அடையாறில் ஒரே பள்ளியாக நிறுவப்பட்டது. ஆல்காட் நினைவுப் பள்ளி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அன்னி பெசன்ட் அம்மையாரின் தலைமையில் செயல்படத் தொடங்கியது.
இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களில் பலர் இன்று இங்கு ஆசிரியர், அலுவலகக் காசாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சத்துணவுத் திட்டம், இலவச நோட்டுப் புத்தகங்கள் தவிர அரசாங்க உதவி ஏதுமின்றி இயங்கி வரும் இப்பள்ளியின் மாணவர்களுக்குக் காலையில் சத்துணவுக் கஞ்சி, 2 செட் சீருடை, பென்சில் பேனா போன்ற பொருட்கள், மாணவர் தங்கும் இலவச விடுதி, கட்டணம் இல்லாக் கல்வி உள்ளிட்ட பல சேவைகளை இப்பள்ளி அளித்துவருகிறது.
நான்கு ஆண்டுகள் முன்புவரை 600-க்கும் மேற்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்துவந்த இந்தப் பள்ளியில் தற்போது 374 மாணவ-மாணவிகள் மட்டுமே படித்துவருகிறார்கள். “ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கான பள்ளி இது என்பதாலும், தாய்மொழி வழிக் கல்வியே சிறந்தது என்பதாலும் இதைத் தமிழ்வழிக் கல்வி கற்பிக்கும் பள்ளியாக நடத்த வேண்டும் என ஆல்காட் தன்னுடைய உயிலில் எழுதிய காரணத்தால் இன்றுவரை இதைத் தமிழ்வழிப் பள்ளியாகவே நடத்திக்கொண்டிருக்கிறோம்.
நாங்கள் தரமான கல்வியும் சுதந்திரமான சூழலையும் மாணவர்களுக்கு வழங்கினாலும் தமிழ்வழிக் கல்வி என்பதாலேயே இங்கு மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது” என்று வருத்தத்துடன் தெரிவிக்கிறார் பள்ளித் தலைமை ஆசிரியை லலிதா.
அக்கறையும் சுதந்திரமும்
“ஆனாலும் நாங்கள் சோர்ந்து போகவில்லை. ஆங்கிலம் இன்றியமையாதது என்பதாலும், செயல்வழிக் கல்வி முக்கியம் என்பதாலும் வெவ்வேறு நிறுவனங்களின் உதவியோடு சிறப்பான பயிலரங்கம், சோதனைக் கூடம் போன்றவற்றை அமைத்திருக்கிறோம். முன்பைக் காட்டிலும் மாணவிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இங்குப் படிக்கும் ஒவ்வொரு மாணவர் மீது தனிப்பட்ட அக்கறை செலுத்துவதையும் அதேநேரத்தில் அவர்களுடைய சுதந்திரத்துக்கு மதிப்பளிப்பதையும் எங்களுடைய கொள்கையாகவே நடைமுறைப்படுத்திவருகிறோம்.” என்கிறார் பள்ளி இயக்குநர் சசிகலா ஸ்ரீராம்.
உயர்தரக் கல்வி வழங்குவதாகச் சொல்லிக்கொள்ளும் பெரிய தனியார் இருபாலர் பள்ளிகள்கூட மேல்நிலை அளவில் மாணவ- மாணவிகளைப் பள்ளி வளாகத்தில் நட்பு பாராட்ட அனுமதிப்பதில்லை, அதன் ஆசிரியர்கள் மாணவர்களைத் தோழமையோடு அணுகுவதில்லை. இத்தகைய கசப்பான நிதர்சனத்துக்கு மத்தியில் மேல்நிலை வகுப்பு மாணவ- மாணவர் ஒன்றுகூடி விளையாடுவதை ஊக்குவிக்கும், மாணவ-மாணவிகளைத் தங்கள் வீட்டுப் பிள்ளைகளாக அணுகும், அவர்கள் எழுச்சி பெற தூண்டுதல் தரும் பெரும் பணியை நூற்றாண்டுக்கும் மேலாக ஆர்ப்பாட்டமின்றிச் செய்துவருகிறது ஆல்காட் என்கிற மாமனிதரை நினைவுகூரும் இப்பள்ளி.
யார் இந்த ஆல்காட்?
1832-ல் நியூ ஜெர்சியில் பிறந்து கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்தார் ஹெண்ட்ரி ஸ்டீல் ஆல்காட். மேடம் பிளாவஸ்கியுடனான சந்திப்பு அவருக்குள் இருந்த தத்துவார்த்தத் தேடலுக்கு விடை அளிக்க இருவரும் இணைந்து பிரம்மஞான சபையை 1875-ல் நியூயார்க் நகரில் நிறுவினர்.
பின்னர் 1879-ல் சென்னை அடையாறு பகுதியில் பிரம்மஞான சபையை நிறுவினார். அடையாறு ஆற்றோரம் வாழ்ந்து வந்த தலித் மக்களின் சொல்லொணா துயரங்கள் அவர்களுக்காகப் பள்ளியை நிறுவும் எண்ணத்தை ஆல்காட்டுக்குத் தோற்றுவித்தது.
No comments:
Post a Comment