உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று ஜாக்டோ- ஜியோ உயர்நிலை குழு கூட்டத்திற்கு பின், போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும், ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ -ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் செப்டம்பர் 7ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் அறிவித்தனர். அரசு ஊழியர்கள் போராட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்த தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
இந்நிலையில், நேற்று பிற்பகலில் ஜாக்டோ - ஜியோ உயர்நிலை குழு கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்துக்கு பிறகு, அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சுப்ரமணியன், மாயவன் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது: நியாயமான 4 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும். செப்டம்பர் 21ம் தேதி, போராட்டத்துக்கான தீர்வுடன் ஆஜராகுமாறு தலைமை செயலாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 21ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி பேச்சுவார்த்தை நடத்துவோம். அப்போது அரசின் அடக்குமுறை, மிரட்டல் தொடர்பாக முறையிடுவோம். அதில் எங்களுக்கு சாதகமான முடிவுகள் வரும்பட்சத்தில் போராட்டத்தை கைவிட்டு பணிகளை தொடருவோம். எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், 22ம்தேதி மதுரையில் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஒன்றுகூடி அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவெடுப்போம்.
ஒவ்வொரு முறையும் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும்போது அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படுகிறது. சம்பளத்தை இழந்துதான், எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 5 தாசில்தார்களை, மாவட்ட கலெக்டர் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த உத்தரவை கலெக்டர் உடனடியாக திரும்ப பெற வேண்டும். நீதிமன்றத்தில் ஆஜரானபோது கேட்கப்பட்ட கேள்விகள், அவற்றுக்கு அளிக்கப்பட்ட பதில்கள் தொடர்பான விளக்க கூட்டம் செப்டம்பர் 19ம் தேதி எல்லா மாவட்டங்களிலும் நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
x
No comments:
Post a Comment