கல்வி தொலைக்காட்சி பார்க்க
பார்க்க உண்டியலில் சேருது காசுதமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சி மூலம் நடத்தப்படும் பாடங்களை மாணவர்கள் படிப்பதை ஊக்குவிக்க, விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தலைமை ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு உண்டியல்கள் வழங்கி, பாடங்களை தவறாது பார்ப்பவர்கள் மற்றும் கொடுக்கப்படும் பயிற்சிகளை செவ்வனே செய்து வரும் மாணவர்களுக்கு தனது சொந்தப் பணத்தில் உண்டியலில் பணம் செலுத்தி சேமிப்பு பழக்கத்தையும் வளர்த்து வருகிறார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் கோ.ஜெயக்குமார் ஞானராஜ். கரோனா கொடுந் தொற்று காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. தமிழக அரசு மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள் எந்தவித தொய்வின்றி நடைபெறுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கல்வி தொலைக்காட்சியில் மாணவர்களுக்கு தினமும் குறிப்பிட்ட நேரங்களில் வகுப்பு வாரியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தொலைக்காட்சி கால அட்டவணை ஏற்கனவே வழங்கப்பட்டு பார்ப்பதற்கு தக்க ஆலோசனைகளை ஆசிரியர்கள் வழங்கியுள்ளனர். இந்நிலையில் மாணவர்கள் ஜூன் மாதம் 21 ம் தேதி முதல் பாடங்களை தொலைக்காட்சி வாயிலாக கற்று வருகின்றனர். தலைமை ஆசிரியர் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளை ஊக்குவிக்கவும், சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கவும் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
மாணவர்களின் வீடுகளுக்கு அவர்கள் தொலைக்காட்சி பார்கும் நேரங்களில் திடீரென ஆசிரியர்கள் சென்று பார்வையிட்டு அதற்கு ஒரு ஸ்டார். வீடுகளில் வைத்தே எழுத்துப் பயிற்சிக்காக இரண்டு கோடு, நான்கு கோடு நோட்டுகள் மற்றும் எழுத்தைப் பார்த்து எழுதும் பயிற்சிக்கான நோட்டுகளை தலைமை ஆசிரியர் வழங்கியுள்ளார். அதனை முறைப்படி எழுதினால் அதற்கு ஒவ்வொன்றுக்கும் ஒரு ஸ்டார், மேலும் சொல்லுவதை எழுதுதல் (ஆங்கிலம் மற்றும் தமிழ்) பயிற்சிக்கு ஒரு ஸ்டார் வழங்கப்படுகிறது. மாணவர்களின் தன் சுத்தத்திற்கு ஒரு ஸ்டார் என வழங்கி, மாணவர்கள் பெறும் ஒவ்வொரு ஸ்டாருக்கும், தலா ரூ.1 வீதம் தனது சொந்தப் பணத்தில் மாணவரின் உண்டியலில் தலைமை ஆசிரியர் உடனே செலுத்திவிடுகிறார்.
மேலும் மாணவர்கள் பொய் சொல்லுதல், பெற்றோருக்கு கீழ்படியாமல் இருக்கிறார்கள் என தெரியவந்தால், அவர்கள் உண்டியலில் இருந்து ஒரு ரூபாய் எடுத்துவிடப்படுகிறது. மாணவர்களுக்கான உண்டியல் அவர்களது வீடுகளிலே தற்போது வைக்கப்பட்டிருக்கும். பள்ளி திறந்த பின்னர் பள்ளியில் வைத்து கற்றல் திறன் அடிப்படையில் ஸ்டார் வழங்கப்பட்டு, பணம் தொடர்ந்து செலுத்தப்படும். 5 ம் வகுப்பு முடித்து செல்லும் போது மாணவர்கள் படித்து, சேமித்த உண்டில் இவர்களிடம் வழங்கப்படும்.
இது குறித்து தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ் கூறுகையில்: இந்த கிராமத்தில் உள்ள முதல் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் இந்த கிராமத்தில் உள்ள இந்தப் பள்ளியில் படித்து வருகிறார்கள். இந்த பெருந்த தொற்று நேரத்தில், தமிழக அரசு மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள் தடையின்றி நடைபெற தீவிர முயற்சி மேற்கொண்டு கல்வி தொலைக்காட்சி வாயிலாக மாணவர்களுக்குப் பாடங்களை நடத்தி வருகிறது. கிராமத்து சிறுவர்கள் விளையாட்டில் நேரத்தைக் கழிப்பார்கள் என்பதால், அவர்களை ஊக்குவிக்கவும், எழுத்துப் பயிற்சி அளிக்கவும் இந்த முயற்சி மேற்கொண்டுள்ளேன். இது நல்ல பலனைத் தந்துள்ளது. மேலும் இது மாணவர்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் என்றார்.
No comments:
Post a Comment