தமிழகத்தில் ஊழல் புகார் கூறப்பட்டு 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் படங்களுடன் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அரசின் பொதுப்பணித் துறையில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகளின் பெயர் பட்டியலை, கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிடப்போவதாக ஒப்பந்ததாரர்கள் எழிலகம் முன் பரபரப்பு பேனர் வைத்திருந்தனர்.
இதை தொடர்ந்து, பொதுப்பணித் துறையில் பணிகளை ஒதுக்கீடு செய்வதற்காக 32 அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக குற்றம்சாட்டிய காண்டிராக்டர்கள், முதல் கட்டமாக 10 பேரின் பெயர்களை வெளியிட்டனர்.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம், காண்டிராக்டர்கள் புகார் செய்தனர். இதனை தொடர்ந்து திருச்சியில் உள்ள பொதுப்பணித்துறை காண்டிராக்டர்களும் லஞ்சம் கேட்கும் அதிகாரிகளின் பெயர்களை வெளியிடப் போவதாகவும் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டினர்.
இந்நிலையில், தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் 12 பேர் மீதும் ஊழல் புகார் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னையில் பரபரப்பு டிஜிட்டல் பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், ''10 ஆயிரம் கோடி ஊழலில் சிக்கிய 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 12 பேரின் பெயர்கள் மற்றும் படங்களும் அதில் இடம் பெற்றுள்ளன. இதில், தமிழகத்தில் பிரபலமான பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி சபிதாவின் படமும் இடம் பெற்றுள்ளது.
பொதுப்பணித் துறையில் லஞ்சம் கேட்பதாக கூறி, அதிகாரிகளின் பெயர் பட்டியலை ஒப்பந்ததாரர்கள் வெளியிட்ட சம்பவம் அடங்குவதற்குள், அரசு நிர்வாகத்தின் உயர் பதவிகளில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது ஊழல் புகார் கூறப்பட்டு பரபரப்பு போஸ்டர்கள் வைக்கப்பட்டு உள்ளது அதிகாரிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
No comments:
Post a Comment