தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீதம் இடம் கிடைக்க அரசு கண்காணிக்க வேண்டும்: ஜி.கே.வாசன் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, May 1, 2015

தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீதம் இடம் கிடைக்க அரசு கண்காணிக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–தனியார் பள்ளிகள் அனைத்தும் இலவசக் கல்விக்கான சட்டத்தை முறையாக, முழுமையாக கடைப்பிடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.கல்வி என்பது ஏழை, எளிய, நடுத்தரம் உட்பட அனைத்து மக்களுக்கும் பொதுவானது. கல்விக் கண்திறந்த பெருந்தலைவர் காமராஜர் தனது ஆட்சியில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்களுக்கிடையே ஏழை, வசதி படைத்தோர் என்ற வேறுபாட்டை களைவதற்காகத் தான் சீருடை என்ற சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தி, கல்வி அனைவருக்கும் சமம் என்ற நிலையை ஏற்படுத்தினார்.ஆனால் இன்றோ வசதி படைத்தவர்களுக்கே அதிக அளவில் கல்வி கற்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் கல்விக்கான சட்டங்களை மத்திய, மாநில அரசுகள் முறையே, முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை.அதாவது இலவசக் கல்விக்கான சட்டத்தின்படி 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி வழங்க வேண்டும். அதன்படி தனியார் பள்ளிகள் முன்பள்ளிக் கல்வி முதல் எட்டாம் வகுப்பு வரை ஏழை மாணவர்களை 25 சதவீதம் சேர்க்க வேண்டும். ஆனால் தமிழ் நாட்டில் கட்டாயக் கல்வித் திட்டத்தின் கீழ் 2013-14 ஆம் கல்வி ஆண்டில் தனியார் பள்ளிகளில் 49,864 மாணவர்களும், 2014-15 ஆம் கல்வி ஆண்டில் 74,127 மாணவர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். இது போதுமானதல்ல. எனவே தனியார் பள்ளிகள் ஏழை மாணவர்களை 25 சதவீதம் முழுமையாக சேர்க்க வேண்டும்.அதற்கு ஒவ்வோர் ஆண்டும் பள்ளிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பே 25 சதவீத ஒதுக்கீட்டிற்கான விண்ணப்பங்களை இலவசமாக வழங்கி, பின்பு தகுதியுடைய மாணவர்களின் பட்டியலை வெளியிட்டு, பெற்றோர்கள் முன்னிலையில் மாணவர்களைத் தேர்வு செய்து அனுமதி அளிக்க வேண்டும். இது குறித்து கிராமம் முதல் நகரம் வரை அனைத்து பகுதிகளிலும் தமிழக அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.மேலும் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை 25 சதவீத ஒதுக்கீட்டிற்கான தெளிவான அரசாணையை வெளிப்படுத்த வேண்டும்.அதனை தனியார் பள்ளிகள் ஆண்டுதோறும் முறையாக நடைமுறைப் படுத்துகின்றனரா என்பதை தமிழக அரசு தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். 25 சதவீதம் மாணவர்களை சேர்க்கும் தனியார் பள்ளிகளுக்கு, அந்த மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளும் என்று அரசாணை பிறப்பித்தது. அதனையும் உரிய காலத்தில் தமிழக பள்ளிக் கல்விதுறை முழுமையாக வழங்கிட வேண்டும்.இந்தியா முழுவதும் உள்ள ஏழை மாணவர்கள் இலவசக் கல்வித் திட்டத்தின் பயனை முழுமையாக அடைவதற்கு மத்திய, மாநில அரசுகள் இலவசக் கல்வியை உறுதிப்படுத்தும் சட்டத்தை முறையே நடைமுறைபடுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment