காலையில் டியூசன் வகுப்பு... மாலையிலும் டியூசன்.. பிள்ளை எப்போதும் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்பதற்காக பழச்சாறுகள் முதல் உயர் ரக பானங்கள் வரை உண்டு.வெளியே டியூசனுக்கு சென்றால் நேரம் விரயமாகும், கவனமும் சிதற வாய்ப்பு உண்டு என்று ஆயிரக்கணக்கான பணம் கொடுத்து ஆசிரியர்களை வீடுகளுக்கே அழைத்து டியூசன் ஏற்பாடு செய்வதும் உண்டு. இப்படி சகல வசதிகளையும் செய்து கொடுத்தும் எதிர்பார்த்ததை விட பிளஸ் 2 தேர்வில் ஓரிரு மதிப்பெண்கள் குறைந்து விட்டால் மனம் நொந்து தவித்துப் போகிறார்கள் பெற்றோர்கள்.இன்னொரு தரப்பு பெற்றோரோ, என் பிள்னை என்னைப் போல் கூலி வேலை செய்யக்கூடாது அவன் நல்லா படிச்சு பெரிய ஆளா வரணும் என்று கனவு காண்கிறார்கள். ஆனால் நிஜ வாழ்க்கையில் சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும் அவர்களுக்கு கை கொடுப்பதில்லை.ஆனால் வாழ்க்கையோடு போராடி வெற்றிப் படிக்கட்டில் கால் வைக்கும் மாணவ செல்வங்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில் நேற்று வெளியான பிளஸ்–2 தேர்வில் சாதித்த சில மாணவ–செல்வங்களின் வறுமை இழையோடும் வாழ்க்கை பின்னணிதான் இது.சென்னை மாடம்பாக்கத்தை சேர்ந்தவர் பாலாஜி. பானிபூரி வியாபாரி. இவரது மகள் புவனேஸ்வரி, கிழக்கு தாம்பரம் கிறிஸ்ட்கிங் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்–2 நர்சிங் படித்து வந்தார்.மாலையில் பள்ளி விட்டதும் தந்தைக்கு உதவியாக பானிபூரி கடையில் வேலை செய்வார். அதன் பிறகு வீட்டுக்கு சென்று நள்ளிரவுவரை கண்விழித்து படிப்பார். அதிகாலை 4 மணிக்கும் எழுந்து படிப்பாராம்.பணம் கட்டி மேல் படிப்பு படிக்க வசதி இல்லை. அதிக மதிப்பெண் எடுத்தால்தான் அரசு கல்லூரியில் இடம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் கஷ்டப்பட்டு படித்து இருக்கிறார்.அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. பிளஸ்–2 நர்சிங் பிரிவில் 600–க்கு 599 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.அதே பள்ளியில் நர்சிங் படித்து வந்தவர் சசிரேகா. மேற்கு தாம்பரத்தை சேர்ந்த இவரது தாய் சரளா கூலி வேலை செய்து வருகிறார்.வீட்டு வேலைகள் முழுவதையும் செய்து விட்டு கஷ்டப்பட்டு படித்து நர்சிங் பாடப்பிரிவில் 595 மதிப்பெண் பெற்று மாநில அளவில் 2–வது இடத்தை பிடித்துள்ளார்.பெரியார்நகர் 16–வது தெருவை சேர்ந்தவர் ராம் குமார். இவரது மகன் ராஜாராமன் (17). பிறவியிலேயே எலும்பு வளர்ச்சி ஒழுங்கின்மை என்ற மரபியல் நோயால் பாதிக்கப்பட்டவர்.கொளத்தூரில் தனியார் பள்ளியில் படித்து வந்த ராஜாராமனால் நடக்க முடியாது. தாயார் பள்ளிக்கு தினமும் தூக்கி செல்வார். மாலையில் காத்திருந்து வீட்டுக்கு தூக்கி செல்வார்.உடல் நிலை சரியில்லாத போதும் மன உறுதியுடன் படித்த ராஜாராமன் 1128 மதிப்பெண் பெற்று பள்ளியில் 2–வது இடத்தை பிடித்துள்ளார்.அண்ணாநகர் அன்னை சத்யாநகரை சேர்ந்த கால்டாக்சி டிரைவரின் மகள் புவனேஸ்வரி தனியார் பள்ளியில் படித்து வந்தார். பிளஸ்–2 தேர்வில் 1059 மதிப்பெண் பெற்றுள்ளார்.தென்காசி பாவூர்சத்திரம் அருகே உள்ள முத்துமாலைபுரத்தை சேர்ந்தவர் நாராயணசாமி, கூலித்தொழிலாளி. இவரது மனைவி லதா, பீடி சுற்றும் தொழிலாளி. இவர்களது மகன் கோபாலகிருஷ்ணன் புல்லுக்காட்டு வலசையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். நேற்று வெளியான தேர்வு முடிவில் 1122 மதிப்பெண் பெற்றுள்ளார். சிவில் என்ஜினீயர் ஆவதே என் ஆசை என்கிறார் இவர்.
கூடுவாஞ்சேரி நந்திவரம் சிவன் கோவில் பகுதியை சேர்ந்தவர் வேதபுரி (50). செக்யூரிட்டி, வேலை செய்கிறார். மனைவி கோட்டீஸ்வரி. இந்த தம்பதிகளின் மகள் ரஞ்சிதா (17). இவர் நந்திவரத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12–ம் வகுப்பு படித்து வந்தார். 12–ம் வகுப்பு பொது தேர்வில் 1156 மதிப்பெண்கள் எடுத்து அரசு பள்ளிகளிலேயே மாவட்ட அளவில் ரஞ்சிதா 3–ம் இடமும், பள்ளியில் முதலிடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
No comments:
Post a Comment