அரசு பள்ளியில் பிளஸ் 1 மாணவர்கள் 'அகதி'களான அவலம்! கலைப்பாட பிரிவுக்கு திடீர் 'மூடுவிழா' - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, June 2, 2015

அரசு பள்ளியில் பிளஸ் 1 மாணவர்கள் 'அகதி'களான அவலம்! கலைப்பாட பிரிவுக்கு திடீர் 'மூடுவிழா'

அரசு பள்ளியில் ஆசிரியர்கள் இல்லாததால், கலைப்பாடப்பிரிவு நடப்பு கல்வியாண்டில் மூடப்பட்டுள்ளது. அப்பள்ளியில், பிளஸ் 1 படித்த மாணவர்கள், பிளஸ் 2 சேர முடியாமல் கண்ணீருடன் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க முடியாமல், கோவை மாவட்டத்தில் இரண்டு அரசு மேல்நிலைப்பள்ளிகளில், வணிகவியல், வரலாறு, பொருளாதாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ் அடங்கிய கலைப்பாடப்பிரிவு,
சத்தமின்றி மூடப்பட்டது. பள்ளிகள் நேற்று துவங்கிய நிலையில், ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்த பிளஸ் 2 மாணவர்கள் கலைப்பாடப்பிரிவு மூடப்பட்டதை அறிந்து, அதிர்ச்சி அடைந்தனர். கடந்த, 2010க்கு முன்பு தரம் உயர்த்தப்பட்ட, 1,200 பள்ளிகளில் கலை பாடப்பிரிவு ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இதில், கோவை குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியும் ஒன்று. இப்பள்ளியில் கலைப்பாடப்பிரிவின் கீழ், 37 மாணவர்கள் கடந்த கல்வியாண்டில், பிளஸ்1 படித்து தற்போது, பிளஸ் 2க்கு தகுதி பெற்றுள்ளனர்.
பெற்றோர் - ஆசிரியர் கழகத்தால் குறைந்த ஊதியத்தில், நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும் ஊதியம் முறையாக தரமுடியாததால், திடீரென நடப்பு கல்வியாண்டில் கலைப்பாடப்பிரிவு மூடப்பட்டுள்ளது. இதனால், பொதுத்தேர்வுக்கு தயராக வேண்டிய மாணவர்கள் மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.தனியார் பள்ளிகளில், மே முதல் பிளஸ்2 சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் நிலையில், இம்மாணவர்கள் கல்வியாண்டு துவங்கியும், பள்ளிக்கு செல்ல முடியாமல் பரிதவித்து வருகின்றனர். மாவட்ட அதிகாரிகளின் ஆலோசனையின்படி, இம்மாணவர்களை குனியமுத்துார் மற்றும் மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளிகளில் சேர்க்கும் பணிகள் நடந்துவருகிறது.
குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை விஜயலட்சுமி கூறுகையில், ''மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், கல்வி அதிகாரி களின் ஆலோசனை படி அருகிலுள்ள பள்ளிகளில் சேர்க்கப்படுவர்,'' என்றார்.
மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை பூரணி புனிதவதி கூறுகையில், ''எங்கள் பள்ளியில், 500 மாணவர்களுக்கு ஒரு வணிகவியல் ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளார். மேலும், ஐந்து கணினிகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. ''வளாக வசதியும் இல்லை. இச்சூழலில், பிளஸ்2 வகுப்பில் மாணவர்களை எவ்வாறு சேர்த்துக்கொள்ள முடியும். மாணவர்களுக்கு தரமான கல்வியை கொடுக்கவேண்டியது அவசியம். எங்கள் சூழலை கல்வி அதிகாரிகளிடம் தெளிவுபடுத்தியுள்ளோம். மாணவர்களின் நிலை குறித்து வருத்தமாக இருந்தாலும், எங்கள் சூழல் அவ்வாறு அமைந்துள்ளது,'' என்றார்.
மாணவர்கள் கூறுகையில், 'பிளஸ்1 குறிச்சி பள்ளியில் படித்தோம்; ஆனால், திடீரென வேறு பள்ளியில் சேர்ந்துகொள்ள அறிவுறுத்தியுள்ளனர். அருகிலுள்ள பள்ளிகளில் இடம் கிடைக்கவில்லை. சக மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராகி வரும் நிலையில், நாங்கள் பள்ளியில் இடம் கிடைக்காமல் தவித்துவருகிறோம். சராசரிக்கு குறைவாக படிக்கும் மாணவர்களை எந்த பள்ளிகள் பிளஸ்2 வகுப்பில் ஏற்க முன்வரும்? இதை கல்வி அதிகாரிகள் சிந்தித்து உடனடியாக எங்களுக்கு உதவவேண்டும்' என்றனர்.
'தீர்வு தான் என்ன?'
தலைமையாசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில்,'மாநில அளவில் அரசு பள்ளிகளில் கலைப்பாடப்பிரிவில் சேரும் மாணவர்களுக்கு இதே அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது; 1,200 பள்ளிகளில் கலைப்பாடப்பிரிவு ஆசிரியர்கள் இல்லை என தெரிந்தும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவது, பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி வருகிறது. ஆசிரியர்கள் இல்லாததற்கு, தலைமையாசிரியர்கள் என்ன செய்ய முடியும்? கலைப்பாடப்பிரிவு ஆசிரியர்களை உடனடியாக பணிநியமனம் செய்யவேண்டும்' என்றார்.

No comments:

Post a Comment