நடப்பு ஆண்டில், இரு நாட்களுக்கு முன்னதாக துவங்கும் என, கணிக்கப்பட்ட தென்மேற்கு பருவ மழை, இம்மாதம், 5ம் தேதி தான் துவங்கும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 'கேரள கடல் பகுதியில், தென்மேற்கு நோக்கி வீச வேண்டிய காற்று, வடமேற்கு நோக்கி வீசுவதே காரணம்' என, 'ஸ்கைநெட்' என்ற, தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆண்டுதோறும், ஜூன், 1ம் தேதி, தென்மேற்கு பருவ மழை துவங்கும். நடப்பு ஆண்டில், அந்தமான் மற்றும் இலங்கையின் தென் பகுதியை, மே, 16ம் தேதி தென் மேற்கு பருவ மழை எட்டியது.இதனால் வழக்கத்தை விட, இரு நாட்கள்
முன்னதாக, 'மே, 30ம் தேதி, கேரள கடல் பகுதியில், பருவ மழை துவங்கும்' என, கணிக்கப்பட்டது.ஆனால், எதிர்பார்த்தபடி கேரள கடல் பகுதியை, பருவ மழை எட்டவில்லை. வழக்கமான ஜூன், 1ம் தேதி துவங்குவதும் தாமதப்பட்டு உள்ளது.தற்போதுள்ள சீதோஷண நிலை நீடித்தால், இம்மாதம், 5ம் தேதி தான், தென்மேற்கு பருவமழை துவங்கும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
*தமிழகத்தில் மழை:வெப்ப சலனம் காரணமாக, தமிழகத்தின் ஒரு சில இடங்களில், முன் பருவ மழை பெய்து வருகிறது. கடந்த, 48 மணி நேரத்தில், கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை, திருப்பூர் மாவட்டம், அவினாசி பகுதிகளில், அதிகபட்சமாக, 7 செ.மீ., மழை பெய்துள்ளது.திண்டுக்கல், நீலகிரி, கோவை, சிவகங்கை, ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், தேனி மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது. இப்பகுதிகளில், 1 செ.மீ., முதல் 5 செ.மீ., வரை மழை பெய்துள்ளது.
அடுத்த, 24 மணி நேரத்துக்கு, மழை பெய்யும் வாய்ப்பு குறித்து, சென்னை வானிலை மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது:தமிழகம் மற்றும் புதுச்சேரியின், ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில், வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை அதிகபட்சமாக, 37; குறைந்தபட்சம், 29 டிகிரி செல்சியஸ் இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment