பள்ளிகள் திறந்து ஒரு வாரமாகியும், பள்ளி வாகன ஆய்வு தொடர்ந்து நடக்கிறது. இவற்றில், தகுதி சான்றிதழ் பெறாத வாகனங்கள் இயக்கப்படுகிறதா என, போக்குவரத்து துறை ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்.
தமிழகத்தில், தனியார் பள்ளிகளுக்கென, 23,444 வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இவற்றை, போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆண்டுதோறும் ஆய்வு செய்ய வேண்டும் என்ற நிபந்தனை உண்டு.நடப்பாண்டில், கடந்த மே, 11ம் தேதி, தமிழகம் முழுவதும் பள்ளி வாகன ஆய்வு
துவங்கியது; 31ம் தேதிக்குள் ஆய்வை முடிக்க திட்டமிடப்பட்டது.ஆனால், 4,000 வாகனங்கள் ஆய்வுக்கு வரவில்லை. ஜூன், 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டன. இருப்பினும், பள்ளி வாகன ஆய்வு தொடர்ந்து நடக்கிறது.
இது குறித்து, போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த மே, 31ம் தேதி வரை, 20,089பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், 18,743 வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் உடனடியாக வழங்கப்பட்டன. பாதுகாப்பு குறைபாடுள்ள, 1,346 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.இவற்றில் குறைபாடு களை சரி செய்த, 658 வாகனங்களை மீண்டும் ஆய்வு செய்து, தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டன. ஜூன், 1ம் தேதி துவங்கி ஒரு வாரத்தில், மேலும், 2,000 வாகனங்கள் வரை ஆய்வு முடிந்து இருக்கும். இது குறித்த தகவல்களை, ஆர்.டி.ஓ.,க்களிடம் கேட்டு உள்ளோம்.இவ்வாறு அவர்கூறினார்.
தற்போது, திருப்பி அனுப்பப்பட்ட, 688 வாகனங்கள் மற்றும் ஆய்வுக்கு வராதவை என, ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன. தகுதி சான்றிதழ் பெறாத இந்த வாகனங்கள் இயக்கப்படுகிறதா என்பதை, போக்குவரத்து துறை சிறப்பு குழுக்களை அமைத்து, கண்காணிக்க வேண்டியது அவசியம்.
No comments:
Post a Comment