பொறியியல் கலந்தாய்வு : தரவரிசைப் பட்டியல் 19-ம் தேதி வெளியீடு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, June 11, 2015

பொறியியல் கலந்தாய்வு : தரவரிசைப் பட்டியல் 19-ம் தேதி வெளியீடு

பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வருகிற 19-ம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில், கலந்தாய்வுக்கான முன்னேற்பாடுகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் உள்ள 538 பொறியியல் கல்லூரிகளில் ஏறத்தாழ ஒரு லட்சத்து 80 ஆயிரம் பிஇ, பிடெக் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொது கலந்தாய்வுமூலமாக ஒற்றைச்சாளர முறையில் (சிங்கில் விண்டோ சிஸ்டம்) நிரப்பப்படுகின்றன.
பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் மே 6-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை விநியோகிக்கப்பட்டன. விண்ணப்ப விற்பனை ஒரு லட்சத்து 90 ஆயிரம் அளவுக்கு இருந்தபோதிலும் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 545 பேர் மட்டுமே வாங்கிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்தனர்.மொத்தமுள்ள ஒரு லட்சத்து 80 ஆயிரம் இடங்களுக்கு ஒன்றரை லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்திருப்பதால் விண்ணப்பித்த அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் இடம் உறுதி. விருப்பமான கல்லூரி கிடைப்பதிலும், பிடித்தமான பாடப்பிரிவு கிடைப்பதிலும்தான் பிரச்சினை. பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள மாணவ-மாணவிகளின் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணி அண்ணா பல்கலைக்கழகத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, மாணவர்களுக்கு வருகிற 15-ம் தேதி ஆன்லைனில் ‘ரேண்டம் எண்’ ஒதுக்கீடு செய்யப்படும். அதைத்தொடர்ந்து, 19-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். அதன்பிறகு விரும்பும் கல்லூரி மற்றும் பாடப் பிரிவை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு ஜூலை 1-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை ஒரு மாத காலத்துக்கு நடைபெற உள்ளது.
இந்த நிலையில், கலந்தாய்வுக்கான முன்னேற்பாடுகள் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கலந்தாய்வுக்கு வரும் வெளியூர் மாணவ-மாணவிகளுக்கும் உடன் வருவோருக்கும் கலந்தாய்வு மையம்அருகே பெரிய ஓய்வுக் கூடமும், கல்விக்கடன் வழங்கும் வங்கிகளுக்கு அரங்குகளும், கலந்தாய்வுக்கு மாணவர்கள் வரிசையாகச் செல்ல வசதியாக தடுப்புப் பாதைகளும் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை முடிப்பதற்கு 2 வாரங்களுக்கு மேல் ஆகிவிடும் என்பதால் இப்போதே பணியை தொடங்கிவிட்டோம் என்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment