பெரியகுளம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் விண்ணப்பம் முதல் சேர்க்கை வரை ஆயிரக்கணக்கணக்கில் பணம் கேட்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. பணம் கேட்பவர்கள் மீது நடவடிக்கை பாயும் என மாவட்ட கல்வி அலுவலர் எச்சரித்துள்ளார்.
பெரியகுளம் மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட அரசு மேல் நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் ஆறாம்வகுப்பு முதல் பிளஸ் ஒன் வகுப்பு வரை சேர்க்கை நடந்து வருகிறது. பெரியகுளம் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பெரியகுளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி உட்பட சில பள்ளிகளில் இலவசமாக கொடுக்கப்படவேண்டிய விண்ணப்பம் நூறு ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மாணவர்கள் சேர்வதற்கு, பள்ளி கட்டட நிதி, பராமரிப்பு செலவு என 500 ரூபாயிலிருந்து, ஆயிரம் ரூபாய் வரை கட்டாயமாக வசூலிக்கின்றனர். மாணவர்களது பெற்றோர்கள் ரசீது கேட்டால் தரமறுக்கின்றனர். "இஷ்டம் இருந்தால் பள்ளியில் சேருங்கள் இல்லையென்றால், வேறு பள்ளியில் சேருங்கள்,' என கூறுகின்றனர்.
பள்ளி நிர்வாகத்தின் தவறான நடவடிக்கைகளை சுட்டிகாட்டவேண்டிய பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மவுனம் காக்கின்றனர். எங்கு சென்று முறையிடுவது என பெற்றோர்கள் வேதனையில் உள்ளனர். அரசு பள்ளிகளில் எவ்வித பணமும் வாங்கமாட்டோம், அவ்வாறு வாங்கினால் அதற்குரிய ரசீது கொடுக்கப்படும் என நோட்டீஸ் போர்ட்டில் எழுதிவைத்துள்ளனர்.
பெரியகுளம் மாவட்ட கல்வி அலுவலர் மேரிஹெலன்ஜெஸிந்தா கூறியதாவது: அரசு பள்ளிகளில் விண்ணப்பத்திற்கோ, மாணவர்கள் சேர்க்கைக்கோ ஒரு ரூபாய் கூட மாணவர்களிடம் வாங்ககூடாது. சம்பந்தப்பட்ட பள்ளிகளில் நேரடியாக ஆய்வு செய்து பணம் வாங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வாங்கிய பணத்தை மாணவர்களிடம் திரும்ப கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
No comments:
Post a Comment