20 ஆண்டுகளாக உயர்த்தப்படாத உதவித்தொகை: ஊரக திறனாய்வு தேர்வில் மாணவர்களுக்கு ஆர்வமில்லை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, August 29, 2015

20 ஆண்டுகளாக உயர்த்தப்படாத உதவித்தொகை: ஊரக திறனாய்வு தேர்வில் மாணவர்களுக்கு ஆர்வமில்லை

ஊரக திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற, மாணவ, மாணவியருக்கு, 20 ஆண்டுகளாக, உதவித்தொகை உயர்த்தப்படாமலேயே உள்ளதால், அதற்கான போட்டித்தேர்வில் பங்கேற்க, மாணவ, மாணவியரிடையே ஆர்வம் குறைந்து வருகிறது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இதில், கிராமப்புற அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், 8ம் வகுப்பில், 50 சதவிகித மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் கலந்து கொள்ளலாம். ஆண்டு குடும்ப வருமானம், ஒரு லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு, அப்ஜெக்டிவ் வடிவிலான எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டு, மாவட்டத்துக்கு, 100 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்களுக்கு, 9ம் வகுப்பு, 10ம் வகுப்பு, ப்ளஸ் 1 மற்றும் ப்ளஸ் 2 என, நான்கு ஆண்டுகளுக்கு தலா, 1,000 ரூபாய் வீதம், வழங்கப்படுகிறது. நடப்பு கல்வியாண்டுக்கான தேர்வில் பங்கேற்க, மாணவ, மாணவியர், தலைமை ஆசிரியர் மூலம், தேர்வுத்துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட, விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, செப்., 31ம் தேதிக்குள் திரும்ப பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த, 20 ஆண்டுகளாக, 1,000 ரூபாய் உதவித்தொகை என்பது, அதிகரிக்கப்படாமலேயே உள்ளதால், இத்தேர்வில் பங்கேற்க, மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால், உதவித்தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் தொடர்ந்து, மேல்நிலைக்கல்வி வரை, படிக்க ஊக்குவிக்கும் வகையில், 20 ஆண்டுகளாக, ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், 1,000 ரூபாய் உதவித்தொகை என்பது, மாணவ, மாணவியருக்கு, பெரும் தொகையாக கருதப்பட்டது. அதனால், போட்டித்தேர்வில் பங்கேற்று, அந்த உதவித்தொகையை பெற வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ஆண்டுதோறும் ஏறிவரும் விலைவாசியும், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியும், இன்றைய சூழ்நிலையில், 1,000 ரூபாய் என்பது, மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் சாதாரண தொகையாக மாறிவிட்டது. இதற்காக, தேர்வெழுதி, வெற்றி பெற்று, அதை அடைந்தாக வேண்டும் என்ற வேகம், மாணவர்களிடம் முழுவதும் குறைந்துவிட்டது. விலைவாசி ஏற்றத்துக்கு தகுந்தது போல், கடந்த ஆண்டுகளில் குடும்ப ஆண்டு வருமானம், 15 ஆயிரம் ரூபாயாக இருந்த, மாணவர்களின் வருவாய் வரம்பு, சில ஆண்டுகளுக்கு முன்பே ஒரு லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டது. வருமான வரம்பினை, பல மடங்கு உயர்த்திய அரசு, உதவித்தொகையை சிறிதும் உயர்த்தவில்லை. இந்த உதவித்தொகைக்காக, விண்ணப்பம் மற்றும் வருமான சான்றிதழ் ஆகியவை சமர்பிக்க, மாணவர்கள் அலட்சியம் காட்டுகின்றனர். ஆசிரியர்கள் வற்புறுத்தி, விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டியுள்ளது. உதவித்தொகை அதிகம் இருப்பின், மாணவர்களே ஆர்வமுடன் கலந்து கொள்ளும் சூழல் உருவாகும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment