பி.இ., படித்து விட்டு, 'குப்பை பிசினஸ்':சமூக அக்கறையுடன் இளைஞர்கள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, August 29, 2015

பி.இ., படித்து விட்டு, 'குப்பை பிசினஸ்':சமூக அக்கறையுடன் இளைஞர்கள்

பி.இ., படித்த இளைஞர்கள் வேலை கிடைக்கவில்லை என, தனியார் நிறுவனங்களில் படிக்கட்டுகளில் ஏறி இறங்கும் நிலையில், மாநகராட்சி குப்பையை பெற்று, இயற்கை உரம் தயாரித்து வருவாய் ஈட்டுகின்றனர், இன்ஜினியரிங் பட்டதாரிகள் இருவர்.குப்பை அள்ளப்படாமல் தேங்கி கிடக்கிறது; துர்நாற்றத்தை சகித்துக்கொள்ள முடியவில்லை என்ற புகார்கள் அதிகரித்து வருகிறது. திடக்கழிவு மேலாண்மையை சிறப்பாக மேற்கொண்டு, துாய்மையான கோவையை உருவாக்க, மாநகராட்சி நிர்வாகமும் போராடி வருகிறது.'என்ன நடந்தால் நமக்கென்ன' என்று, குப்பையை தரம் பிரிக்காமல், ஒப்படைப்பதாலே இவ்வளவு பிரச்னையும் ஏற்படுகிறது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள், தன்னார்வ அமைப்புகள் வாயிலாக, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது மாநகராட்சி.

வீட்டுக் குப்பையை பார்த்தாலே, ச்சீ... என, மூக்கை பொத்திக்கொள்ளும் நிலையில், இன்ஜினியரிங் படித்த மாணவர்கள், குப்பையை தரம் பிரித்து பெற்று, சமூக தொழிலாக மேற்கொண்டுள்ளனர். பி.இ., மெக்கானிக்கல் படித்த பிரசாந்த், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் படித்த சரண்ராஜ் ஆகியோர், 'ராக்' மற்றும் 'கிளீன் சிட்டி' தன்னார்வ அமைப்புகள் உதவியுடன், இப்பணியை மேற்கொண்டுள்ளனர்.

பிரசாந்த் கூறியதாவது:

பள்ளி, கல்லுாரியில் படிக்கும்போதே, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு போன்றவற்றில் ஆர்வமாக இருந்தோம். தற்போது, சுற்றுச்சுழலுக்கு பாதிப்பில்லாத வகையில், குப்பையில் உரம் தயாரிக்கிறோம்.

மாநகராட்சியில், ராமநாதபுரம், 67வது வார்டு, கோவைபுதுாரில் 90வது வார்டுகளிலும், நஞ்சுண்டாபுரம் ரோட்டில் பார்சன் அப்பார்ட்மென்ட்டில், துப்புரவு தொழிலாளர்கள் குப்பையை தரம் பிரித்து சேகரிக்கும் வகையில், வீடு வீடாக விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம்.

துப்புரவு தொழிலாளர்கள், மக்கும் குப்பை, மக்காத குப்பையை வார்டு அலுவலகத்துக்கு கொண்டு வருகின்றனர். அவர்களிடம் இருவித குப்பையையும் நாங்களே பெற்றுக்கொள்கிறோம். மக்காத குப்பைக்கு கிலோ அடிப்படையில் துப்புரவு தொழிலாளர்களுக்கு பணம் கொடுக்கிறோம்.

மக்காத குப்பையை, தனித்தனியாக பிரித்து விற்பனை செய்கிறோம். மக்கும் குப்பையை, அருகிலுள்ள தோட்டத்தில் கொட்டி, பரப்பி விடுகிறோம். மானாவாரி நிலத்தில், ஒவ்வொரு பகுதியாக பிரித்து குப்பையை கொட்டுகிறோம். 15 நாட்களில், ஒரு ஏக்கர் முழுவதும் குப்பையை பரப்பி விடுகிறோம். இந்த முறையில் குப்பை கொட்டும் போது, துர்நாற்றம் ஏற்படாமல், இயற்கை உரமாக மாறி விடுகிறது.

மறுபடியும் அதன் மீதே குப்பையை பரப்புகிறோம். இதனால், சிறந்த இயற்கை உரம் கிடைப்பதுடன், சுற்றுச்சூழல் பாதிப்பின்றி திடக்கழிவு மேலாண்மை பணிகள் நடக்கின்றன. தற்போது, ஒரு வார்டில் ஒரு டன் மக்கும் குப்பையும், 350 கிலோ மக்காத குப்பையும் கிடைக்கிறது.

முதலில் இரண்டு பேர் இப்பணியை செய்தோம்; தற்போது ஆறு பேர் இணைந்துள்ளனர். 'பி.இ., படித்து விட்டு, குப்பை பிசினஸ் செய்வதா' என்று தயங்காமல், சமூக அக்கறையுடன் இப்பணியை துவங்கினோம். இதன் மூலம், மாதத்துக்கு கணிசமான தொகை வருவாய் கிடைக்கிறது. மக்காத குப்பைக்கு மட்டும், துப்புரவு தொழிலாளர்களுக்கு பணம் கொடுக்கிறோம். வருங்காலத்தில் இயற்கை உரம் விற்கும் போது, மக்கும் குப்பைக்கும் துப்புரவு தொழிலாளர்களுக்கு பணம் கொடுக்க திட்டமிட்டுள்ளோம்.கோவையை சுற்றிலும், மானாவாரி நிலப்பரப்பு அதிகமுள்ளது. விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்து, மக்கும் குப்பை அனைத்தையும் மானாவாரி பகுதியில் பரப்பி இயற்கை உரம் தயாரிக்கலாம்.

இதன் மூலம், வார்டுகளில் சேகரமாகும் குப்பையை கிடங்குக்கு கொண்டு செல்ல, மாநகராட்சி செலவிடும் தொகை சேமிக்கப்படும். படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக காத்திருக்காமல், இத்திட்டத்தில் இணைந்தால், நகரமும் துாய்மையாகும், இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு பெருகும்.இவ்வாறு, நம்பிக்கையுடன் தெரிவித்தார் பிரசாந்த்.

No comments:

Post a Comment