மாணவ, மாணவியருக்கு தலைமை பண்பு அவசியம்' - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, August 29, 2015

மாணவ, மாணவியருக்கு தலைமை பண்பு அவசியம்'

மாணவ, மாணவியருக்கு, தலைமை பண்பு பயிற்சி மிகவும் அவசியம்; தங்களுக்கு தலைமை பொறுப்பு வேண்டாம் என ஒதுங்கும் அவர்களின் பயத்தை, தயக்கத்தை போக்க வேண்டும்,'' என, எத்திராஜ் கல்லுாரி முதல்வர் நிர்மலா கூறினார்.நானி பல்கிவாலா சமரச மையம், எத்திராஜ் கல்லுாரி மற்றும் 'போரம் ஆப் ப்ரீ என்டர்பிரைசஸ்' ஆகியவை இணைந்து, மாணவர்களின் எதிர்கால தலைமை பண்புக்கான இரண்டு நாள் சிறப்பு பயிற்சியை, சென்னை எத்திராஜ் கல்லுாரி வளாகத்தில் நேற்று துவக்கின.எத்திராஜ் கல்லுாரி முதல்வர் நிர்மலா பேசுகையில், ''தற்கால மாணவ, மாணவியருக்கு, தலைமை பண்பு பயிற்சி மிகவும் அவசியம். தங்களுக்கு தலைமை பொறுப்பு வேண்டாம் என ஒதுங்கும் மாணவ, மாணவியரின் பயத்தை, தயக்கத்தை, மாணவ பருவத்திலேயே போக்க வேண்டும்; அதற்கு, இது போன்ற பயிற்சிகள் மிக அவசியம்,'' என்றார்.நானி பல்கிவாலா சமரச மைய இயக்குனர் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் என்.எல்.ராஜா, பயிற்சியை துவக்கி வைத்து பேசியதாவது:
மாணவர்கள், எதிர்காலத்தில் முக்கிய பொறுப்புகளுக்கு வரும் போது, அவர்களுக்கு தலைமை பண்பு மிகவும் அவசியமாகிறது. அதற்கு, அவர்கள் தங்களை சுற்றியுள்ளவர்களை புரிந்து கொண்டு, அவர்களின் தன்மைகளையும், விருப்பங்களையும் அறிந்து செயல்பட வேண்டும்.
தலைமை பதவிகளுக்கு வருவோருக்கு காலம் தவறாமை, எதையும் சமாளித்தல் போன்றவை தேவைப்படும். அதற்காக, இந்த பயிற்சியை மாணவ பருவத்திலேயே அளிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.

நானி பல்கிவாலா மைய பதிவாளர் துர்காலட்சுமி பேசியதாவது:
வெறும் பேச்சு, அறிவுரை, 'பவர் பாய்ன்ட் பிரசன்டேஷன்' என்ற நிலையை தாண்டி, அறிவை துாண்டும் செயல்முறைகள் மூலம் இரண்டு நாட்கள் பயிற்சி நடத்துகிறோம்.
ஏழாம் ஆண்டாக தொடர்ந்து பயிற்சி நடக்கிறது. தமிழகம் முழுவதுமிருந்து, 120 மாணவ, மாணவியர் பயிற்சிக்கு வந்துள்ளனர். எங்கள் பயிற்சியின் விவரங்களை, www.nparbitration.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
பயிற்சிக்கு இரண்டாம் ஆண்டாக வந்துள்ள, கடலுார் பெரியார் அரசு கலைக்கல்லுாரி மாணவர் அருண் கூறுகையில், ''பயிற்சி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நாங்கள், இங்கே பெறும் பயிற்சியின் படி, எங்கள் கிராமத்தில் உள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்கிறோம்,'' என்றார்.
மும்பையை சேர்ந்த ராஜிவ் லவ், சச்சின் காமத் ஆகியோர், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர். மொழித்தொடர்பு, நேர நிர்வாகம், சுய நிர்வாகம், சுய மரியாதை, லட்சியம் வைத்து செயல்படுதல், கூட்டு முயற்சி போன்ற தலைப்புகளில் பயிற்சி தரப்படுகிறது.

No comments:

Post a Comment