தில்லி சாலைக்கு அப்துல் கலாம் பெயர் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, August 29, 2015

தில்லி சாலைக்கு அப்துல் கலாம் பெயர்

தில்லியில் உள்ள ஒளரங்கசீப் சாலைக்கு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயர் சூட்ட புது தில்லி நகராட்சி கவுன்சில் (என்டிஎம்சி) வெள்ளிக்கிழமை முடிவு செய்தது.
அப்துல் கலாம் மறைவுக்குப் பிறகு அவரது பெயரில் சாலைகள், நினைவிடம், அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன. சில மாநிலங்களில் கலாமை போற்றும் வகையில் சாலைகள், கல்வி நிலையங்களுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக என்டிஎம்சி கூட்டத்தில் வெள்ளிக்கிழமை விவாதிக்கப்பட்டது. அப்போது "கொடுங்கோல் ஆட்சி செய்த மொகலாய மன்னர் ஒளரங்கசீப் பெயரை தில்லியில் உள்ள சாலைக்கு வைத்துள்ளதற்குப் பதில் அப்துல் கலாம் பெயர் வைக்கலாம் என்று உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து நீண்ட நேரம் விவாதித்த பிறகு கலாம் பெயர் சூட்ட கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
தில்லி இந்தியா கேட் அருகே உள்ள தாஜ்மான் சிங் சாலை சந்திப்பில் தொடங்கும் ஒளரங்கசீப் சாலை, பிரதமரின் அலுவல்பூர்வ இல்லம் அமைந்துள்ள ரேஸ்கோர்ஸ் சாலையை இணைக்கும் சஃப்தர்ஜங் சாலை சந்திப்பு வரை உள்ளது. மேலும், இந்தச் சாலையில் இஸ்ரேல், பிரேசில், டென்மார்க் ஆகிய நாடுகளின் தூதரங்கள் உள்ளன. கலாம் மறைந்த போது, ஒளரங்கசீப் சாலைக்கு கலாம் பெயர் சூட்ட வேண்டும் என தில்லியில் முதலாவது குரலை ஒலித்தவர் கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி உறுப்பினர் மகேஷ் கிரி. இதைத் தொடர்ந்து, அவரது கோரிக்கையை என்டிஎம்சி உறுப்பினர்கள் பலரும் முன்னெடுத்துச் சென்று கலாம் பெயரில் தில்லியில் சாலை அமைய வழியமைத்துள்ளனர்.
முதல்வர் வாழ்த்து: இதற்கிடையே, ஒளரங்கசீப் சாலைக்கு கலாம் பெயர் வைக்கும் என்டிஎம்சியின் முடிவை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரை (டுவிட்டர்) பதிவில் "ஒளரங்கசீப் சாலைக்கு கலாம் பெயரை சூட்டிய என்டிஎம்சிக்கு வாழ்த்துகள்' என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment