ஆதிதிராவிடர் விடுதிகளில் உள்ள மாணவர்களுக்கு எவர்சில்வர் தட்டு, டம்ளர் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, August 28, 2015

ஆதிதிராவிடர் விடுதிகளில் உள்ள மாணவர்களுக்கு எவர்சில்வர் தட்டு, டம்ளர்

ஆதிதிராவிடர்-பழங்குடியின விடுதிகளில் தங்கியுள்ள 98 ஆயிரம் மாணவர்களுக்கு அரசு சார்பில் எவர்சில்வர் தட்டு, டம்ளர் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
ஆதிதிராவிடர் பழங்குடியின பணிபுரியும் மகளிருக்கு தங்கும் விடுதிகள் தொடங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். முதல்கட்டமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, திருச்சி மாவட்டங்களில் இந்தப் புதிய விடுதிகள் துவங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ், முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை படித்தளித்த அறிக்கை:
ஆதிதிராவிடர்-பழங்குடியின நல விடுதிகள்-உண்டி உறைவிடப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியருக்கு குறித்த நேரத்தில் உணவு தயாரித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 160 பழங்குடியினர் பள்ளிகளுக்கும், 100 ஆதிதிராவிடர் பள்ளிகளுக்கும் என மொத்தம் 260 நீராவி கொதிகலன்கள் வாங்கப்படும்.
விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவ-மாணவியர் அவரவர் வசதிகளுக்கு ஏற்ப, தட்டு-டம்ளர்களை பயன்படுத்தி வருகின்றனர். அவர்களிடையே ஒற்றுமை-ஒருமைப்பாட்டை வளர்க்கும் வகையில், ஆயிரத்து 314 ஆதிதிராவிடர் விடுதிகளில் தங்கிப் பயிலும் 98 ஆயிரம் பேருக்கு எவர்சில்வர் தட்டு-டம்ளர் வாங்கி வழங்கப்படும். பணிபுரியும் ஆதிதிராவிடர்-பழங்குடியின மகளிர் பிற மாவட்டங்களுக்குச் சென்று தங்கிப் பணிபுரிவதற்கு ஏதுவாக முதல்கட்டமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, திருச்சி மாவட்டங்களில் புதிய விடுதிகள் தொடங்கப்படும். வரும் கல்வியாண்டில் 5 ஆதிதிராவிடர்-பழங்குடியினர் உண்டி உறைவிட உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாகவும், 15 நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும்.
சேலம், விழுப்புரம் மாவட்டங்களில் இயங்கி வருவதைப் போன்று, நீலகிரி மாவட்டம் உதகையில் முத்தோரை பாலாடா பழங்குடியினர் ஆராய்ச்சி மைய வளாகத்தில் மாதிரி உண்டி உறைவிடப் பள்ளி உருவாக்கப்படும். பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியருக்கு கணினி மூலம் பாடங்களை கற்றுக் கொடுக்கும் வகையில் 26 உண்டி உறைவிட உயர்நிலைப் பள்ளிகளில், ஒரு பள்ளிக்கு ஸ்மார்ட் வகுப்பறை ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

No comments:

Post a Comment