ஒவ்வொரு எம்.பி.க்கும் அரசின் மாதாந்திர செலவு ரூ.2.7 லட்சம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, September 30, 2015

ஒவ்வொரு எம்.பி.க்கும் அரசின் மாதாந்திர செலவு ரூ.2.7 லட்சம்

கடந்த ஆண்டு 543 தொகுதிகளுக்கான எம்.பி.க்களுக்காக ரூ.176 கோடி செலவிடப்பட்டுள்ளது. அதாவது சம்பளம் மற்றும் செலவினங்கள் உட்பட எம்.பி.ஒருவருக்கு மாதமொன்றுக்கு ரூ.2.7 லட்சம் அல்லது அதற்கு சற்று கூடுதலாக செலவிடப்பட்டுள்ளது என்று அதிகாரபூர்வ தரவுகள் கூறுகின்றன.

எம்.பி.க்களுக்கு மாதச் சம்பளம் ரூ.50,000; தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.45,000; அலுவலகச் செலவுகள் நிதி ரூ.15,000; செக்ரெடேரியல் அசிஸ்டன்ஸ் நிதி ரூ.30,000.

நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் போது நாளொன்றுக்கு ரூ.2000. மேலும் அரசுப் பணிகளுக்காகச் செல்லும் போது 34 விமானப் பயணத் தொகைகளை அரசிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். மேலும் வரம்பற்ற ரயில், சாலைப் போக்குவரத்துகள் செலவுகளுக்கும் அனுமதி உண்டு.

இந்தச் செலவுகளுக்கான விவரங்களை நாடாளுமன்ற தலைமையகம் மாதாமாதம் வெளியிடும்.

இவை தவிர இலவச வீட்டு வசதி, மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இலவச தண்ணீர், மின்சாரம், தொலைபேசி வசதிகள், மற்றும் மருத்துவ சிகிச்சை செலவுகள் அனுமதிக்கப்படுகிறது. இது நாடாளுமன்றம் மாதாமாதம் வெளியிடும் செலவினங்களில் வெளியிடப்பட மாட்டாது.

பயண செலவுகள்:

தினசரிப் படி, பயண செலவின மீட்புத்தொகை ஆகியவை ஒன்று சேர்க்கப்படும். இதுதான் ஒட்டுமொத்த எம்.பி.க்கள் செலவில் பாதித் தொகையை ஆக்கிரமித்து வருகிறது. அதாவது அரசு தரவுகளின் படி இவ்வகையில் ஆண்டுக்கு ரூ.83 கோடி செலவாகிறது. பயண செலவுகள் கோரலில் உள்ள வித்தியாசமே எம்.பி.க்களின் அரசு சார்ந்த செலவுகளில் அவர்களிடையே வேறுபாட்டை ஏற்படுத்துகிறது.

உதாரணமாக, அரசுத்துரை தரவுகளின் படி, அந்தமான், நிகோபார் தீவுகளின் பாஜக எம்.பி. விஷ்ணு பாத ரே மற்றும் கேரள மாநிலம் அட்டிங்கல் தொகுதி சி.பி.எம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.சம்பத் ஆகியோர் ஜூன் 2014 முதல் ஜூன் 2015 வரையிலான காலத்தில் தலா ரூ.1 கோடி செலவினங்களைக் கோரியுள்ளனர். மேலும் 61 எம்.பி.க்கள் ஓராண்டில் ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை பயண செலவுகள் கோரியுள்ளனர்.

அமைச்சர்கள் குறைந்த அளவே செலவுகளுக்காக கோருகின்றனர், காரணம் அவர்கள் அமைச்சரானவுடனேயே அந்தந்த அமைச்சகங்கள் அவருக்கான செலவினங்களை செலவிடுகின்றன என்று நாடாளுமன்ற தலைமையக அதிகாரி ஒருவர் விளக்கினார்.

அமெரிக்காவில் எம்.பி.க்கான ஆண்டு சம்பளம் ரூ.1.04 கோடி, பிரிட்டனில் ரூ.57 லட்சம், இந்தியாவில் ரூ.6 லட்சம்.

No comments:

Post a Comment