மருத்துவக் கலந்தாய்வு விவகாரம்: அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை முதலில் நிரப்ப உத்தரவு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, September 30, 2015

மருத்துவக் கலந்தாய்வு விவகாரம்: அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை முதலில் நிரப்ப உத்தரவு

அனைத்து மாநிலங்களிலும் 2015-16 ஆண்டுக்கான மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் முதலில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை நிரப்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

            2015-16 கல்வியாண்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆகிய மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. மூன்று கட்டக் கலந்தாய்வு முடிவடைந்த நிலையில்
, இன்னும் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் 55 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
இதேபோல அகில இந்திய அளவில் மொத்தம் 960 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. முந்தைய கல்வியாண்டுகளில் அகில இந்திய ஒதுக்கீடுகளின் கீழ் நிரப்பப்படாமல் இருந்த காலியிடங்களில் அந்தந்த மாநில மாணவர்களுக்கு சேர்க்கை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், 2015-16 கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்காக அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்திருந்த கிருத்திகா நிகாம், ஆர்.சந்தோஷ், ராகுல் குமார் சர்மா உள்ளிட்ட பலர், தங்களுக்கு இடம் கிடைக்காத நிலை உள்ளதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ரோஹின்டன் ஃபாலி நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, பாதிக்கப்பட்ட மாணவர்களின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், "மருத்துவப் படிப்புகளுக்கு அகில இந்திய அளவிலான ஒதுக்கீட்டு இடங்களை, அந்தந்த மாநில அரசுகள் பயன்படுத்தி வருகின்றன. இதனால், மாணவர்கள் பலர் பாதிப்படைந்து வருகின்றனர். எனவே, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை முழுமையாக நிரப்ப மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்' என்றார்.
இந்திய மருத்துவக் கவுன்சில் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் கெüரவ் சர்மா, "ஒவ்வொரு ஆண்டும் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைமுறைகள் அனைத்தையும் செப்டம்பர் 30-க்குள் முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் அடிப்படையில்தான் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இருப்பினும் இந்த ஆண்டு சில மாநிலங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன' என்றார்.
இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், "அகில இந்திய ஒதுக்கீடுகளின் கீழ் நிரப்பப்பட வேண்டிய இடங்களை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் நிரப்புங்கள். அதிலும் இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தால், மாநில அரசுகளைக் கலந்து ஆலோசித்து கூடுதல் கலந்தாய்வு நடத்துவது தொடர்பாக நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டு வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment