பி.எட். கலந்தாய்வு இன்று தொடக்கம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, September 28, 2015

பி.எட். கலந்தாய்வு இன்று தொடக்கம்

ஆசிரியர் கல்வியியல் இளநிலை பட்டப் படிப்பான பி.எட். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு சென்னை காமராஜர் சாலை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் திங்கள்கிழமை (செப். 28) தொடங்குகிறது. காலை 8.30 மணிக்கு உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன் கலந்தாய்வைத் தொடக்கி வைத்து, மாணவர்களின் கல்லூரிச் சேர்க்கைக்கான கடிதங்களை வழங்க உள்ளார்.
தமிழகம் முழுவதும் 21 அரசு, அரசு நிதியுதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரத்துக்கும் அதிகமான பி.எட். இடங்களில் 2015-16-ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நடத்துகிறது. 
செப்டம்பர் 28-இல் தொடங்கி, அக்டோபர் 5 வரை 6 நாள்கள் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளன. இதற்கு 7,425 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
முதல் நாளில் காலை மாற்றுத் திறனாளிகளுக்கும், பிற்பகல் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கும் கலந்தாய்வு நடத்தப்படும். செப்டம்பர் 29-இல் கணிதப் பாடப் பிரிவினருக்கும், 30-இல் இயற்பியல், வேதியியல் பிரிவினருக்கும் கலந்தாய்வு நடத்தப்படும். அக்டோபர் 1-இல் தாவரவியல், விலங்கியல் பிரிவினருக்கும், 3-இல் தமிழ், ஆங்கில பாடப் பிரிவினருக்கும், 5-இல் காலையில் வரலாறு, புவியியல், வணிகவியல் பிரிவினருக்கும், பிற்பகல் பொருளாதாரம், மனை அறிவியல் பிரிவினருக்கும் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
இதற்கான அழைப்புக் கடிதங்கள் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு தபாலில் கடிதங்களும், அவர்களின் செல்லிடப்பேசிகளுக்கு குறுந்தகவலும் அனுப்பப்பட்டுள்ளன.
தகவல் கிடைக்கப் பெறாதவர்களும் கட்-ஆஃப், பாடப் பிரிவு விவரங்களின் அடிப்படையில் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என பி.எட். மாணவர் சேர்க்கை செயலர் பாரதி கூறினார்.
தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (என்.சி.டி.இ.) புதிய (2014) வழிகாட்டுதலின்படி, பி.எட்., எம்.எட். படிப்புகளின் படிப்புக் காலம் 2015-16ஆம் கல்வியாண்டு முதல் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment