பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழை முதல் பாடமாக தேர்வெழுத 7 ஆயிரம் மாணவர்களுக்கு விலக்கு - உயர் நீதிமன்றம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, January 26, 2016

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழை முதல் பாடமாக தேர்வெழுத 7 ஆயிரம் மாணவர்களுக்கு விலக்கு - உயர் நீதிமன்றம்

சிறுபான்மையின பள்ளிகளில் பயின்ற பத்தாம் வகுப்பு மாணவர்கள் தமிழை முதல் பாடமாக தேர்வு எழுத விலக்கு அளிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட 7 ஆயிரம் மாணவர்களுக்கு மட்டும் விலக்கு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2006-ம் ஆண்டு தமிழக அரசு கொண்டு வந்த கட்டாய தமிழ் கற்றல் சட்டப் படி சிறுபான்மை மொழி பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் முதல் பாடமாக (பார்ட்-1) தமிழை கண்டிப்பாக கற்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதன்படி, கடந்த 2006-ம் ஆண்டு ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தவர்கள் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கட்டாயம் தமிழில் தேர்வு எழுத வேண்டுமென பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த உத்தரவால் தமிழகத் தில் உள்ள சிறுபான்மை மொழி பள்ளிகளில் பயின்ற சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களது பள்ளிகளில் தமிழில் பாடம் நடத்தாத நிலையில், தமிழில் தேர்வு எழுதுவது கடினம் எனக்கூறி கல்வித்துறை அதிகாரிகளிடம் மனு அளித்ததாகவும் அந்த கோரிக்கையை பள்ளிக் கல்வித்துறை ஏற்கவில்லை என்றும் எனவே வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழை முதல் பாடமாகக் கொண்டு தேர்வு எழுத விலக்கு அளிக்க உத்தரவிடக்கோரி, பாதிக்கப்பட்ட சுமார் 7 ஆயிரம் மாணவர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, மாணவர்கள் தேர்ந்தெடுத்த மொழியில் முதல் பாடமாக தேர்வு எழுதுவது குறித்து பதிலளிக்க பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.சத்யநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கு தொடர்ந்த சம்பந்தப்பட்ட 7 ஆயிரம் மாணவர்களுக்கு மட்டும் தமிழில் முதல் பாடமாக தேர்வெழுத விலக்கு அளித்து விசாரணையை வரும் மார்ச் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment