காலையில் டி.டி.சி.பி., - மாலையில் சி.எம்.டி.ஏ., தேர்வு; ஒரே நாளில் நடத்துவதால் தேர்வாளர்கள் குழப்பம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, January 26, 2016

காலையில் டி.டி.சி.பி., - மாலையில் சி.எம்.டி.ஏ., தேர்வு; ஒரே நாளில் நடத்துவதால் தேர்வாளர்கள் குழப்பம்

நகர், ஊரமைப்புத் துறையான டி.டி.சி.பி., சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., ஆகியவற்றில், சர்வேயர் மற்றும் உதவி வரைவாளர் பணிக்கு, ஒரே நாளில் தேர்வு நடப்பதால் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

நகர் மற்றும் ஊரமைப்பு துறையில், சர்வேயர் மற்றும் உதவி வரைவாளர் பணிக்கு, 90 இடங்கள் காலியாக உள்ளன. இந்த பணி இடங்களுக்கு, 2015ல், ஆள் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கான கல்வித்தகுதியில் சில குறைபாடுகள் இருந்ததால், போதிய எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வரவில்லை. கல்வித் தகுதியில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு, மீண்டும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி, 150க்கும் மேற்பட்டோரின் விண்ணப்பங்கள் தகுதி பெற்றன. அவர்களுக்கான எழுத்து தேர்வு, வரும், 31ம் தேதி, சென்னை முகப்பேர் மேற்கு பகுதியில் உள்ள வேலம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளியில், காலை, 10:00 மணிக்கு நடக்கும் என நகரமைப்பு துறை அறிவித்து உள்ளது. அதற்கான அனுமதி சீட்டுகளும் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

சி.எம்.டி.ஏ., தேர்வு

நகர் மற்றும் ஊரமைப்பு துறை தேர்வு நடக்கும் அதே மையத்தில், அதே நாளில் பிற்பகலில், சர்வேயர் மற்றும் உதவி வரைவாளர் பணிக்கான எழுத்து தேர்வு நடத்த சி.எம்.டி.ஏ.,வும் திட்டமிட்டு உள்ளது.சி.எம்.டி.ஏ.,வில், காலியாக உள்ள ஏழு பணியிடங்களுக்கு, 99 பேர் விண்ணப்பித்து உள்ளதாக கூறப்படுகிறது.டி.டி.சி.பி.,யில், இத்தேர்வுக்காக விண்ணப்பிப்பது முதல் அனைத்து பணிகளும் பிரத்யேக இணையதளம் வாயிலாக மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இதே பணிக்கு, சி.எம்.டி.ஏ.,வில் நடந்த விண்ணப்ப நடைமுறைகள் மிகவும் ரகசியமாக உள்ளதாக கூறப்படுகிறது.

குழப்பம்

இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத விண்ணப்பதாரர்கள் கூறியதாவது:பொதுவாக, சர்வேயர் மற்றும் உதவி வரைவாளர் பணிக்கு தகுதி பெற்றவர்கள் குறிப்பிட்ட சிலர் மட்டுமே இருப்பர். அவர்களில் பெரும்பாலானோர், டி.டி.சி.பி.,க்கும், சி.எம்.டி.ஏ.,வுக்கும் விண்ணப்பித்து உள்ளனர்.இதில், ஒரே விஷயத்துக்கு, ஒரே நாளில் இரண்டு தேர்வுகள் எழுதுவது, இயல்பான மனிதருக்கு எத்தகைய பிரச்னை ஏற்படுத்தும் என்பதை யாரும் கருத்தில் கொள்ளவில்லை.ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட நபர்களை தவிர மற்றவர்கள், இத்தேர்வில் பங்கேற்பதை தவிர்க்கும் நோக்கத்திலேயே, சி.எம்.டி.ஏ., நிர்வாக பிரிவு அதிகாரிகள் வேண்டுமென்றே இப்படி தேர்வு நடத்துகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்

No comments:

Post a Comment