சாலை விதிகள் தெரிந்தவர்களால்தான் விபத்துகள் அதிகம் ஏற்படுகின்றன: ஆய்வில் அதிர்ச்சி தகவல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, January 27, 2016

சாலை விதிகள் தெரிந்தவர்களால்தான் விபத்துகள் அதிகம் ஏற்படுகின்றன: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் படிக்காதவர்களை காட்டிலும் படித்தவர்களால் சாலை விபத்துகள் அதிகளவில் நடை பெறுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. படித்தவர்கள் சாலை விதிகளை நன்கு அறிந்திருந்த போதிலும் அவற்றை பின்பற்றாமல் செல்வதால் விபத்துகள் ஏற்படு வதாக வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 2014-ல் நடைபெற்ற ஆய்வில் 4,89,400 சாலை விபத்துகள் நடந்துள்ளதும், 1,18,008 விபத்துகள் 8-ம் வகுப்பு வரை படித்தவர்களாலும், 1,52,778 விபத்துகள் 8 முதல் 10-ம் வகுப்பு வரை படித்தவர்களாலும், 2,08,224 விபத்துகள் 10-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் பயின்றவர்களாலும் நடைபெற்றது தெரியவந்துள்ளது. 10,390 விபத்துகளுக்கு காரண மானவர்களின் படிப்பு விவரம் தெரியவில்லை என தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளி விவரப் பட்டியலில் குறிப்பிடப் பட்டுள்ளது.

இந்தப் பட்டியல் அடிப்படையில் 8-ம் வகுப்பு வரை பயின்றவர்களால் நிகழ்ந்த விபத்துகளில், மத்திய பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. 8 முதல் 10-ம் வகுப்பு வரையும், அதற்கு மேல் பயின்றவர்களாலும் நடைபெற்ற விபத்துகளை பொருத் தவரை தமிழகம் முதலிடத்தில் உள்ளது. மொத்த விபத்துகளில் இது 42.5 சதவீதம் ஆகும்.

இதுதொடர்பாக, மதுரை மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜே.கே. பாஸ்கரன் கூறியதாவது:

பொதுவாக சாலை பாதுகாப்புக் கும், பாதுகாப்பான பயணத்துக் கும் சாலைக் கட்டமைப்பு (இன்ஜினியரிங்), சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு (எஜு கேஷன்), விதிமீறலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுத்தல் (என்போர்ஸ்மென்ட்) ஆகியன முக்கிய பங்கு வகிக்கின்றன. நாட்டில் படிக்காதவர்கள், குறை வாக படித்தவர்கள் நன்கு தெரிந்த வாகனங்களை ஓட்டுவதால், அவர்களால் ஏற்படும் விபத்துகள் குறைவாக இருக்கின்றன. பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் பயின்றவர் கள் சாலை விதிகளை நன்கு தெரிந்து வைத்துள்ளனர். இருப்பி னும், விதிகளை பின்பற்றாமல் வாகனங்களை ஓட்டிச் செல்கின்ற னர். அவர்களில் பெரும்பாலானோர் பெரிய, சிறிய வாகன ஓட்டுநர்களை துச்சமாகவும், பாதசாரிகளை கேவலமாகவும் நினைக்கின்றனர்.

போலீஸார், போக்குவரத்து அதிகாரிகளுக்கு பயந்து குறுக்கு வழியில் வாகனத்தை இயக்கிச் செல்வது, மற்ற வாகனங்களுக்கு விட்டுக்கொடுக்க மனமின்றி செல்வது, செல்போன் பேசிக்கொண்டும், மது அருந்தியும், மற்றவர்களைக் கவர வேண்டும் என்ற எண்ணத்திலும் வாகனத்தை அதிவேகத்தில் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்துகின்றனர். பலர் குடும்பப் பிரச்சினைகளை மனதில் நினைத்துக் கொண்டு, சாலை மீது முழுக் கவனம் செலுத்தாமல், ஏதோ சிந்தனையில் வாகனத்தை ஓட்டுகின்றனர். இதனாலும் விபத்துகள் நடக்கின்றன.

விபத்து தொடர்பான புள்ளி விவரங்களின்படி படித்தவர்கள் மத்தியில் விபத்துகள், சாலைப் பாதுகாப்பு பற்றிய போதுமான விழிப்புணர்வு இல்லை எனத் தெரிகிறது. ‘திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது’ என்ற பட்டுக்கோட்டை யாரின் பாடலுக்கு ஏற்ப அனைத்து வாகன ஓட்டுநர்களும் விழிப்புணர்வுடன் பாதுகாப்பாக வாகனத்தை இயக்கினால் விபத்து இல்லாத இந்தியாவை, தமிழகத்தை உருவாக்க முடியும் என்றார்.

No comments:

Post a Comment