விண்ணில் சீறிப் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி35 ராக்கெட்: ஸ்காட்சாட் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, September 26, 2016

விண்ணில் சீறிப் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி35 ராக்கெட்: ஸ்காட்சாட் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 8 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி35 ராக்கெட் திங்கள்கிழமை காலை 9.12 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஸ்காட்சாட்டை தொடர்ந்து மற்ற 7 செயற்கோள்களும் வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி- சி35 ராக்கெட் ஏவப்பட்டது.

ஸ்காட்சாட் நிலைநிறுத்தம்:

பிஎஸ்எல்வி - சி35 ராக்கெட்டில் பருவநிலை தொடர்பான ஆய்வுக்காக 371 கிலோ எடையுள்ள ‘ஸ்காட்சாட்-1’ என்ற செயற்கைக்கோள் அனுப்பப்பட்டது. வானிலை முன்னறிவிப்பு குறித்த தகவல்களை இந்த செயற்கைக்கோள் மூலம் பெற இயலும். இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 720 கி.மீ. உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டது. துருவ சூரிய ஒத்தியங்கு சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள்.

மற்ற 7 செயற்கைக் கோள்களும்..

இதுதவிர அல்ஜீரியா, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகள் தயா ரித்துள்ள 5 செயற்கைக் கோள்கள், மும்பை ஐஐடி உருவாக்கியுள்ள ‘பிரதம்’, பெங்களூரு பிஇஎஸ் பல் கலைக்கழகம் உருவாக்கியுள்ள ‘பிசாட்’ ஆகிய செயற்கைக் கோள்களும் அனுப்பப்பட்டன.

இந்த 7 செயற்கைக்கோள்கள் துருவ வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்படுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. 8 செயற்கைக்கோள்களின் மொத்த எடை 675 கிலோ.

இதுவே முதல்முறை:

இந்திய ராக்கெட் மூலமாக ஒரே பயணத்தின்போது, இருவிதமான சுற்றுப்பாதைகளில் செயற்கைக் கோள்களை நிலைநிறுத்துவது இதுவே முதல்முறை.

பிரதமர் மோடி வாழ்த்து:

பிஎஸ்எல்வி சி-35 ராக்கெட்டை 8 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக ஏவிய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விஞ்ஞானிகளுக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இத்தருணம் பெருமகிழ்ச்சி மற்றும் பெருமையைத் தருகிறது. நம் விஞ்ஞானிகள் தொடர்ந்து வரலாறு படைத்து வருகின்றனர். கண்டுபிடிப்பில் அவர்களின் பேரார்வம், 125 கோடி இந்தியர்களின் மனதைத் தொட்டிருக்கிறது. இந்தியாவை உலக அளவில் பெருமை கொள்ளச் செய்திருக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment