கல்லூரி கல்வி இயக்குனர் பதவி பந்தாடப்படும் ! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, September 27, 2016

கல்லூரி கல்வி இயக்குனர் பதவி பந்தாடப்படும் !

தமிழக கல்லுாரிகளை நிர்வகிக்கும், கல்லுாரி கல்வி இயக்குனர் பதவி, இரண்டு ஆண்டுகளாக பந்தாடப்படுகிறது. 10 நாட்களில் காலியான, கல்லுாரி கல்வி இயக்குனர் பொறுப்பு, தொழில்நுட்ப கல்வி இயக்குனர், ராஜேந்திர ரத்னுவுக்கு, கூடுதலாக தரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள, 740 கலை, அறிவியல் கல்லுாரிகள், 724 ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகளை, கல்லுாரி கல்வி இயக்ககம் கண்காணித்து, நிர்வாக பணிகளை மேற்கொள்கிறது. இந்த இயக்ககத்தின் இயக்குனர் பதவி, இரண்டு ஆண்டுகளாக, மாதந்தோறும் மாற்றி, பந்தாடப்படுகிறது.

புதிய இயக்குனர் : கல்லுாரி கல்வி இயக்குனர் செந்தமிழ் செல்வி, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றார். புதிய இயக்குனராக, செய்யார் அரசு கல்லுாரி முதல்வர், தேவதாஸ் நியமிக்கப்பட்டார். பின், அவர் திடீரென மாற்றப்பட்டு, புதிய இயக்குனராக, பேராசிரியர் சேகர் நியமிக்கப்பட்டார். மாற்றப்பட்ட தேவதாஸ், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, மீண்டும் பதவியை பெற்றார். கடந்த, 2015ல், அவர் ஓய்வு பெற்றதும், பேராசிரியர் சேகர், மீண்டும் கல்லுாரி கல்வி இயக்குனரானார். அவரது நியமனத்தை எதிர்த்து, சேலம் பேராசிரியை ஒருவர் வழக்கு தொடர்ந்தார்; ஆனால், சேகர் பதவில் இருந்து மாற்றப்படவில்லை.

சேகரின் பதவிக்காலம், மூன்று மாதங்களுக்கு முன் முடிந்த நிலையில், இயக்குனர் பணியிடம் மீண்டும் காலியானது. ஒரு மாத இடைவெளியில், தொழில்நுட்ப கல்வி இயக்குனர் மதுமதிக்கு, கல்லுாரி கல்வி இயக்குனராக, கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது; அவரும், 10 நாட்கள் பணியாற்றிய நிலையில், 15 நாட்களுக்கு முன், உணவு வழங்கல்துறை கமிஷனராக மாற்றப்பட்டார்.

தொழில்நுட்ப கல்வி இயக்குனர் பொறுப்பு, பூம்புகார் கப்பல் கழக மேலாண் இயக்குனர், ராஜேந்திர ரத்னுவுக்கு, கூடுதலாக தரப்பட்டு, கடந்த வாரம் பொறுப்பேற்றார். கல்லுாரி கல்வி இயக்குனர் பொறுப்பும், அவருக்கு, இன்னொரு கூடுதல் பொறுப்பாக தரப்பட்டு
உள்ளது

சிக்கல் : இரண்டு ஆண்டுகளாக, கல்லுாரி கல்வி இயக்குனர் பொறுப்பு, தொடர்ந்து பந்தாடப்படுவதால், பேராசிரியர் நியமனம், நிர்வாக பணிகள், மாணவர் சேர்க்கை கண்காணிப்பு உள்ளிட்ட, பணிகளில் தொடர்ந்து சிக்கல் நிலவுகிறது.

No comments:

Post a Comment