'புதிய ஓய்வூதிய திட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் குறித்த விபரம் எங்களுக்கு தெரியாது' என, ஓய்வூதிய நிதி ஒழுங்கற்று மேம்பாட்டு ஆணையம் (பி.எப்.ஆர்.டி.ஏ.,) கைவிரித்துள்ளது. மத்திய அரசு செயல்படுத்திய புதிய ஓய்வூதிய திட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள், மேற்கு வங்கம், திரிபுரா தவிர்த்த மற்ற மாநில அரசு ஊழியர்கள் இணைக்கப்பட்டனர்.
இத்திட்டத்தில் 2016 ஜூலை வரை 17 லட்சத்து 11 ஆயிரத்து 727 மத்திய அரசு ஊழியர்கள், 30 லட்சத்து 72 ஆயிரத்து 872 மாநில அரசு ஊழியர்கள், ஐந்து லட்சத்து ௪,௦௧௯ பொதுத்துறை ஊழியர்கள் உள்ளனர். இவர்களிடம் இருந்து சந்தா தொகையாக (அரசு பங்கு உட்பட) ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 935 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்கள் 4.23 லட்சம் பேரிடம் வசூலித்த சந்தா மற்றும் அரசு பங்குத் தொகை என 8,600 கோடி ரூபாயை ஆணையத்தில் செலுத்தவில்லை. இதனால் பணியின் போது இறந்தோரின் குடும்பம், ஓய்வு பெற்றோருக்கு பணப்பலன் பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது.
இந்நிலையில் தமிழக அரசு, புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தாஷீலா நாயர் தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்து வருகிறது.புதிய ஓய்வூதியத் திட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களில், பணியின் போது இறந்தோர் குடும்பத்திற்கு மட்டுமே நுாறு சதவீத பணப்பலன் தரப்படும். ஓய்வு பெறுவோர் 60 சதவீத பணப்பலன் மட்டுமே பெற முடியும்; மீத தொகை, ஓய்வூதியத்திற்காக அரசு, தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுகிறது. இதில் அதிகபட்சம் 7.5 சதவீத வட்டி மட்டுமே தரப்படுகிறது. இதனால் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 1,000 ரூபாய் கூட ஓய்வூதியம் கிடைக்கவில்லை; மற்ற மாநில அரசு ஊழியர்களுக்கும் இதேநிலை தான்.
ஓய்வூதிய நிதி ஒழுங்கற்று மேம்பாட்டு ஆணைய செயல்பாடுகள் குறித்து, திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் பிரடரிக் ஏங்கல்ஸ் தகவல் உரிமைச் சட்டத்தில் விபரம் பெற்றுள்ளார். அதில், '2016 ஆக.,16 வரை தமிழகத்தைச் சேர்ந்த 390 மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். 38 பேர் பணியில் இறந்துள்ளனர். இறந்தோர் குடும்பத்திற்கு (நுாறு சதவீதம்), ஓய்வுப் பெற்றோருக்கு (60 சதவீதம்) பணப்பலனாக மொத்தம் 4.80 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.ஓய்வூதியத்திற்காக அரசு, தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்ட தொகை குறித்த விபரம் இல்லை' என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், 'ஆணைய நிர்வாக செலவு, பணியாளர்களுக்கான சம்பளம் ஆகியவை அரசு ஊழியர்களிடம் பிடிக்கப்படும் தொகையில் கிடைக்கும் கமிஷன் மூலமே செலவழிக்கப்படுகிறது.
2005--06 முதல் 2015--16 வரை 151.33 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது' என தகவல் தரப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் கூறியதாவது: 10 ஆண்டுகள் பணிபுரிந்து (அதிகபட்ச சம்பளம் 30 ஆயிரம் ரூபாய்) சமீபத்தில் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு, 810 ரூபாய் தான் ஓய்வூதியம் கிடைக்கிறது. மேலும், ஓய்வூதியம் பெறுவோர் இறந்தால், 40 சதவீத தொகையையும் திருப்பி தருவதில்லை. வங்கியில் டிபாசிட் செய்தால் கூட மூத்த குடிமகனுக்கு 9.5 சதவீதம் வட்டியும், இறந்த பின் டிபாசிட் தொகையும் தரப்படுகிறது; கடனும் பெற்று கொள்ளலாம். ஆனால், எங்களுக்கு எதுவும் இல்லை. ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஓய்வு பெறும்போது நுாறு சதவீத பணப்பலனும் திருப்பி தர வேண்டும், என்றனர்.
No comments:
Post a Comment