புதிய ஓய்வூதிய திட்டம் ரத்தாகிறதா? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, September 24, 2016

புதிய ஓய்வூதிய திட்டம் ரத்தாகிறதா?

ஓய்வூதிய திட்டம் குறித்து முடிவு எடுப்பதற்காக, அரசு அமைத்துள்ள நிபுணர் குழு, மூன்றாவது நாளாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களிடம் கருத்து கேட்டது. தமிழக அரசு ஊழியர்களுக்கு, பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டம், 2003 ஏப்., 1ல், அமல்படுத்தப்பட்டது. இதற்கு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என, அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தர, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையிலான நிபுணர் குழுவை, தமிழக அரசு அமைத்தது. இக்குழு, தலைமைச் செயலகத்தில், இம்மாதம், 15, 16ல், கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தியது. நேற்று மூன்றாவது நாளாக, கருத்து கேட்பு கூட்டம் தொடர்ந்தது.

தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான, ஜாக்டா, தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர்கள் சங்கம் உட்பட, பல சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி, நிபுணர் குழுவிடம் மனுவும் அளித்தனர்.

இது குறித்து, ஜாக்டா ஒருங்கிணைப்பாளர் இளமாறன் கூறியதாவது:
புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வந்த பின், இதுவரை, ஓய்வூதியம் வழங்க விதிமுறைகள் வகுக்கப்படவில்லை. குறைந்தபட்ச ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியத்திற்கும் உத்தரவாதம் இல்லை. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மன உளைச்சல் இன்றி வாழ, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த, அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என, மனு கொடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment