வங்க கடலில் அந்தமான் அருகே புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி இருக்கிறது.
புயல் சேதம்
வங்க கடலில் உருவான வார்தா புயல் கடந்த 12–ந் தேதி சென்னையில் கரையை கடந்தது. அப்போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மரங்களும், ஏராளமான மின் கம்பங்களும் சாய்ந்தன.
பெரும் சேதத்தை ஏற்படுத்திய வார்தா புயல் மேற்கு நோக்கி நகர்ந்து, படிப்படியாக வலு இழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி அரபிக்கடலில் லட்சத்தீவு பகுதியில் தற்போது நிலைகொண்டு உள்ளது.
காற்றழுத்த தாழ்வு நிலை
இந்த நிலையில், வங்க கடலில் மியான்மர் நாட்டின் தெனசெரிம் கடற்கரை மற்றும் தெற்கு அந்தமானையொட்டிய கடல் பகுதியில் புதிதாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி இருக்கிறது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:–
கரையை கடந்த வார்தா புயல் வலு இழந்து லட்சத்தீவு மற்றும் அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டு உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சனிக்கிழமை (இன்று) ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும்.
தமிழகத்தை நோக்கி நகருமா?
இதற்கிடையே, வங்க கடலில் தெற்கு அந்தமானையொட்டிய பகுதியில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருக்கிறது. இது மிக மிக தொடக்க நிலைதான். இப்போது உள்ள நிலையை வைத்து அது எந்த திசையை நோக்கி நகரும் என்று கூற இயலாது.
மேலும் அரபிக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி தமிழகத்தை நோக்கி வர வாய்ப்பு இல்லை.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நேற்று காலை 8–30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 3 செ.மீ. மழையும், மரக்காணம், மயிலத்தில் தலா 1 செ.மீ. மழையும் பெய்து உள்ளது.
No comments:
Post a Comment