பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நாம் எந்தப் படிப்பை நோக்கிப் பயணிக்கப் போகிறோம் என்பதைக் காட்டும். பிளஸ் 2 பொதுத்தேர்வோ உயர் கல்வியை மட்டுமல்ல, அடுத்து என்னவாகப் போகிறோம் என்பதையும் சேர்த்தே காட்டும். அப்படி முக்கியத்துவம் பெற்ற பிளஸ் பொதுத் தேர்வு முடிவுகளைப் பள்ளி ஆசிரியர்களும், பெற்றோர்களும் கொஞ்சம் கூடுதலாக எதிர்பார்ப்பார்கள். இந்த எதிர்பார்ப்புகளே பல மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு பற்றிய பயத்தைக் கூட்டிவிடும்.
இதன் காரணமாக பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்கள் அச்சமின்றி தேர்வை எழுதவும், வழிகாட்டவும் ‘இனிது இனிது தேர்வு இனிது’ என்ற பிரத்யேக வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்துவதற்கு ‘தி இந்து’ தமிழ் நாளிதழும், சென்னை எஸ்கேஆர் பொறியியல் கல்லூரியும் கரம் கோர்த்தன. திருவண்ணாமலையில் கடந்த 7-ம் தேதி இந்த வழிகாட்டி நிகழ்ச்சி திருமலை மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கத் திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பிளஸ் டூ தேர்வு மாணவர்கள் குவிந்தனர். தேர்வை எதிர்கொள்ளப் பல்துறை ஆலோசகர்கள் வழங்கிய ஆலோசனைகளை ஆர்வத்துடன் கேட்டனர்.
நிதானமும் பொறுமையும்
நிகழ்ச்சியில் தன்னம்பிக்கை பேச்சாளர் ஹென்றி அமல்ராஜ் பேசும்போது, “அதிகளவில் மதிப்பெண் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் மாணவர்களைப் பெற்றோர் வழி நடத்துகின்றனர். மேலும், மற்ற மாணவர்களுடன் ஒப்பிட்டுத் தரத்தைக் குறைத்து விடுகின்றனர். அவ்வாறு செயல்படக் கூடாது. கல்வியும், தேர்வும் நமக்கு அடித்தளம். தேர்வைக் கண்டு அஞ்சக் கூடாது. நிதானமாகவும், பொறுமையாகவும் செயல்பட்டுத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தனித்திறன் மற்றும் தலைமை பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு செயலிலும் ஈடுபாடு இருக்க வேண்டும். எதிர்மறை சிந்தனைகளை அறவே ஒழித்து, நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொண்டு மாணவர்கள் சாதனை புரிய வேண்டும்” என்றார்.
No comments:
Post a Comment