அப்துல்கலாம் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
அப்துல்கலாம்
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மரணமடைந்ததை தொடர்ந்து அவரது உடல் நேற்று முன்தினம் அடக்கம் செய்யப்பட்டது. ராமேசுவரம் அருகே உள்ள பேய்க்கரும்பு என்ற இடத்தில் அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி உள்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள், தலைவர்கள், லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
போலீஸ் பாதுகாப்பு
அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தற்போது தடுப்புகள் அமைத்து தேசியக்கொடி நட்டு வைக்கப்பட்டுள்ளது. அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
போலீஸ் துணைசூப்பிரண்டு முத்துராமலிங்கம் கூறும்போது, ‘‘அப்துல்கலாம் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இங்கு நினைவு மண்டபம் கட்டும்பணி நிறைவடையும் வரை நாள்தோறும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் சுழற்சிமுறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்’’ என்றார்.
தொடர்ந்து மக்கள் அஞ்சலி
கலாமின் நினைவிடத்தில் தொடர்ந்து மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் மாணவ, மாணவிகள், இளைஞர்கள் என ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அப்துல்கலாமின் ஆன்மா சாந்தியடையவும், அவருடைய கனவுகள் நிறைவேறவும் அவர்கள் பிரார்த்தனை செய்தனர்.
கடந்த 29, 30 ஆகிய 2 நாட்களில் சுமார் 7 லட்சம் பேர் அப்துல்கலாமுக்கு மரியாதை செலுத்தி உள்ளதாக உளவுத்துறையினர் தெரிவித்தனர்.
மலேசிய பயணிகள்
மலேசியாவில் இருந்துவந்த ராஜலட்சுமி, ஜெயலட்சுமி உள்பட 18 பேர் நேற்று அஞ்சலி செலுத்தினர். அவர்கள் கூறும்போது, ‘‘சுற்றுலா பயணிகளாக இந்தியாவுக்கு வந்தோம். சென்னை வந்தபோது அப்துல்கலாம் மறைந்த செய்திகேட்டு அதிர்ச்சி அடைந்தோம். அவருக்கு அஞ்சலி செலுத்த 30-ந்தேதி ராமேசுவரம் வந்தோம். கூட்டம் காரணமாக எங்களால் அஞ்சலி செலுத்த முடியவில்லை. இதனால் இங்கேயே தங்கியிருந்து இன்று அஞ்சலி செலுத்தினோம். கலாம் போன்ற மாமனிதரை இனி பார்க்கமுடியாது. அவரது மறைவு உலகளவில் பேரிழப்பு’’ என்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர், அப்துல்கலாம் நினைவிடம் அருகே மரக்கன்று நட்டு அஞ்சலி செலுத்தினார். இவர் மாவட்ட அளவில் சிறந்த இளைஞராக தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசின் விருது பெற்றவர். அவர் கூறுகையில், ‘புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை மாவட்டங்களில் கோவில்களுக்கு சொந்தமான இடங்களில் சுமார் 5 லட்சம் மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளேன்’ என்றார்.
No comments:
Post a Comment