ஐ.ஐ.டி., என்.ஐ.டி.,க்களில் படிப்பை பாதியில் நிறுத்திய 4,400 மாணவர்கள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, August 5, 2015

ஐ.ஐ.டி., என்.ஐ.டி.,க்களில் படிப்பை பாதியில் நிறுத்திய 4,400 மாணவர்கள்

கல்வி கற்பதில் சிரமம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஐ.ஐ.டி., என்.ஐ.டி., உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளில் 4,400 மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு உறுதிமொழி அளித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, லோக்சபாவில் கேள்வி நேரத்தின் போதுகேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், கடந்த 2012-13 முதல் 2014-15ம் கல்வியாண்டு வரை, ஐ.ஐ.டி.,க்களில் இருந்து 2,060 மாணவர்கள் பாதியில் நிறுத்தியுள்ளனர். இதேகாலகட்டத்தில் என்.ஐ.டி.,க்களில் இருந்து 2,352 மாணவர்கள் பாதியில் நிறுத்தியுள்ளனர் என கூறியுள்ளார்.

மேலும் அவர், வேறு கல்லூரி,கல்வி நிறுவனங்களுக்கு மாறுதல், தனிப்பட்ட காரணங்கள், மருத்துவ காரணங்கள், உயர்நிலை கல்வியில் போது பணி கிடைத்தது மற்றும் கல்வி கற்பதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளனர். அழுத்தம் மற்றும் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவ செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. கல்வி கற்பதில் சிரமப்படும் மாணவர்களின் பிரச்னைகளை தீர்க்கவும் அரசு உறுதிபூண்டுள்ளது என கூறியுள்ளார்.

கடந்த 2014 -15ம் ஐ.ஐ.டி.,க்களில் இருந்து 757 பேர் நீக்கப்பட்டுள்ளனர். 2013-14 காலகட்டத்தில் 697 பேர் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளனர்.. 2012-13ல் 606 பேர் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளனர். இதில் ரூர்க்கி ஐ.ஐ.டி.,யில் இருந்து 228 பேரும், காரக்பூர் ஐ.ஐ.டி.,யில் இருந்து 209 பேரும், டில்லி ஐ.ஐ.டி.,யில் இருந்து 169 பேரும் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளனர். மாண்டி, ஜோத்பூர், கான்பூர், சென்னை ஐ.ஐ.டி.,யில் இருந்து எந்த மாணவரும் படிப்பை பாதியில் நிறுத்தவில்லை.

கடந்த 2014-15ல் 717 மாணவர்களும். 2013-14ல் 785 மாணவர்களும், 2012-13ல் 850 மாணவர்களும் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளனர். இந்தியாவில் தற்போது, 15 ஐ.ஐ.டி.,க்களும், 30 என்.ஐ.டி.,க்களும் உள்ளன.

No comments:

Post a Comment